சட்டமா அதிபரை அரசியலமைப்பு சபையில் முன்னிலையாகுமாறு அழைக்கவுள்ள சபாநாயகர்

Report Print Ajith Ajith in அரசியல்

சட்டமா அதிபரை சட்ட விளக்கம் அளிக்கும் வகையில் அரசியலமைப்பு சபையின் முன் முன்னிலையாகுமாறு சபாநாயகர் அழைக்கவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் சர்ச்சைக்குரிய உரையாடலை நடத்திய குற்றச்சாட்டில் எம்பிலிப்பிட்டிய நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

எனினும் இதனை அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச ஆகியோர் நாடாளுமன்றத்தில் வைத்து கண்டித்திருந்தனர்.

ரஞ்சன் ராமநாயக்கவுடனான உரையாடலின்போது ரஞ்சனின் தீர்ப்பு செல்வாக்கை நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய நிராகரிக்கிறார்.

அத்துடன் அது தொடர்பில் அவர் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாட்டை செய்துள்ளார். இந்த நிலையில் ஏன் அவரை கைது செய்ய வேண்டும் என விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.

எனவே சட்டமா அதிபரின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இதனை விஜயதாஸ ராஜபக்சவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் விளக்கம் கோரி சட்டமா அதிபரை சபையின் முன் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கரு ஜெயசூரியவிடம் முன்வைத்திருந்தனர்.