சம்பந்தன் இருக்கும்வரை அவரே தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்! சுமந்திரன் உறுதி

Report Print Rakesh in அரசியல்

இரா.சம்பந்தன், கட்சியை வழிநடத்தக்கூடிய ஆற்றல் இருக்கும் வரைக்கும் - சுகதேகியாக இருக்கும் வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அவரே செயற்படுவார்.

அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. அவருக்குரிய ஆற்றலும் அனுபவமும் இப்போது வேறு எவரிடமும் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இரா.சம்பந்தனுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் சி.வி.விக்னேஸ்வரனைக் கூட்டமைப்புக்குள் கொண்டு வந்தோம். அவரை வடக்கு மாகாண முதலமைச்சராக்கினோம்.

அவர் தன்னுடைய முதலமைச்சர் பதவிக்காலம் முடிவடையும் வரைக்கும் கூட்டமைப்பின் உறுப்பினராகவே இருந்தார். பதவிக்காலம் முடிந்து மறுநாள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்தார்.

புதிய கட்சிக்கான ஆயத்தங்களை அவர் முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே செய்திருந்தார்.

அப்படியான ஒருவரான விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாறினால் கூட்டமைப்புடன் தான் மீண்டும் இணைவேன் என்று கூறுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. எவரும் வரலாம் போகலாம். ஆனால், இரா.சம்பந்தனே தலைவராக இருப்பார்.

அவருக்கு கட்சியை வழிநடத்தக்கூடிய ஆற்றல் இருக்கும் வரைக்கும் - சுகதேகியாக அவர் இருக்கும்வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகச் செயற்படுவார்" - என்றார்.

Latest Offers