ராஜபக்ச ஆட்சியை இனிமேல் எவரும் கவிழ்க்கவே முடியாது! மஹிந்த உறுதி

Report Print Rakesh in அரசியல்

“தேசிய வளங்களைப் பிறநாட்டவருக்குத் தாரைவார்ப்பது எமது அரசின் கொள்கையல்ல.

கடந்த அரசின் செயற்பாடுகள் தேசிய வளங்களுக்குப் பாரிய அச்சுறுத்தலாகக் காணப்பட்டன, இவற்றைக் கருத்தில்கொண்டு மக்கள் மீண்டும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

மக்கள் எம் மீது கொண்டுள்ள நம்பிக்கை முழுமையாகப் பாதுகாக்கப்படும். எமது ஆட்சியை இனிமேல் எவரும் கவிழ்க்கவே முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

சுங்கத் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் சுங்கத் திணைக்களத்துக்கு இதுவரையில் நான்கு முறை மாத்திரமே வருகை தந்துள்ளேன். சர்வதேச சுங்கத் தினம் ஜனவரி மாதம் 26ம் திகதி கொண்டாடப்படுகின்றது.

உலக சுங்க அமைப்பு 1952ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் திகதி உருவாக்கப்பட்டது. இருப்பினும் இலங்கை சுங்கத் திணைக்களம் 210 வருட கால பழைமை வாய்ந்தது.

இலங்கையில் சுங்க சேவை 1806ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திணைக்களம் பழமையானதுடன் தேசிய பொருளாதார முன்னேற்றத்திலும் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளது.

ஆகவே, இந்தத் திணைக்களத்தைப் பாதுகாப்பது எமது பிரதான எதிர்பார்ப்பாகும். தேசிய பொருளாதாரத்தில் 60 சதவீத பங்களிப்பை சுங்கத் திணைக்களம் வழங்குகின்றது.

இந்த நிதி அபிவிருத்தி நடவடிக்கைளுக்கு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. ஆகவே, சுங்கத் திணைக்களத்தினர் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

சுங்கத் திணைக்களம் தேசிய பாதுகாப்புடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தும்போது அதில் சுங்கத் திணைக்களத்தின் ஒத்துழைப்பு பிரதானமாகக் காணப்படும்” என குறிப்பிட்டார்.