ஒருவார காலத்திற்குள் முடிவு!

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உருவெடுத்திருக்கும் தலைமைத்துவப் பிரச்சினைக்கு இன்னும் ஒருவாரத்திற்குள் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாக வெளியாகிவரும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க, அடுத்தவாரத்திற்குள் கட்சியிலிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவுகட்டப்படும் என்று கூறினார்.

இது ஊடகங்களில் வெளியான தகவல்களாகும். ஐக்கிய தேசியக் கட்சிக்கு பதவிகளை வழங்குவது பற்றிய விடயங்கள் யாப்பில் உள்ளன. நபர்களை தெரிவுசெய்வதால் செயற்குழுவுக்கு யோசனை முன்வைக்க வேண்டும்.

மாறாக தனித்து நியமனங்களை வழங்கிட முடியாது. அதனால் தனிநபரது விருப்பத்திற்கு ஏற்ப நியமனம், நீக்கம் என்பவற்றை மேற்கொள்ள முடியாது. 2020ஆம் ஆண்டிற்கான மத்திய செயற்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.

வருடாந்தம் இந்த செயற்குழுவின் ஆயுட்காலம் டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.

ஆகவே தற்போது கட்சிக்குள் இருக்கின்ற தலைமைத்துவப் பிரச்சினை உள்ளிட்ட கட்சிக்குள் இருக்கின்ற அனைத்து நெருக்கடிகளுக்கும் இந்த வார இறுதிக்குள் முடிவுகாண வேண்டும்.

ஏனென்றால் மார்ச் மாதத்தில் தேர்தலுக்கான தயார்படுத்தலை கட்சி செய்யவேண்டியுள்ளது. தனிநபர்களின் நோக்கங்களை ஓரங்கட்டி மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக முன்நகர்ந்து செல்லவேண்டும்.

இப்போது தேர்தலுக்கான தயார்படுத்தலை கட்சி மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது. கூட்டணியொன்று அமைக்கப்படுவது மிகச் சிறந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணிக்குள் அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொள்வது அவசியமாகும்.

சஜித் பிரேமதாஸவே இதற்கு தலைமைதாங்க வேண்டும். எதிர்வரும் வாரத்திற்குள் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வுகாணப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.