அரசாங்கத்தின் பயணம் நாட்டை இருண்ட யுகத்தை நோக்கி அழைத்து செல்கிறது! வேலுகுமார் எம்.பி

Report Print Gokulan Gokulan in அரசியல்

புதுயுகம் படைக்கப்போவதாக பிரமாண்ட அறிவிப்புக்களை விடுத்து அரியணையேறிய இந்த அரசாங்கத்தின் பயணமானது நாட்டை இருண்டயுகம் நோக்கி அழைத்துச்செல்லும் வகையிலேயே அமைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்த சிறு அளவிலான ஒப்பந்தக்காரர்களுக்கு கூட வயிற்றில் அடிக்கும் வகையிலேயே அரசாங்கத்தின் நிர்வாகப்பொறிமுறை சுழன்றுக்கொண்டிருப்பதாகவும், இதனால் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் அவசியத்துவத்தை அனைத்து தரப்பினரும் இன்று உணர ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் கண்டி அலுவலகத்தில் இன்று வாராந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

2015ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான எமது அரசாங்கம், ஆட்சியை பொறுப்பேற்கும்போது நாடு பாரிய கடன்பொறிக்குள் சிக்கியிருந்தது. ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்பனவும் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்தன.

ஆனால் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கடன்பொறிக்குள் இருந்து நாட்டை மீட்டெடுத்தோம். மறுபுறத்தில் பொருட்கள், சேவைகளின் விலைகளும் குறைக்கப்பட்டன.

அதேபோல் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு புத்துயிர்கொடுக்கப்பட்டது. ஆனாலும் பெரும்பான்மை இன மக்களின் மனங்களில் இனவாதத்தை விதைத்து, சிறுபான்மையின அரசியல் தலைவர்களுக்கு பயங்கரவாத முத்திரையை குத்தி - வாக்குவேட்டை நடத்தியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேனும், பாலும் பாய்ந்தோடும் என்றெல்லாம் ராஜபக்ச சகோதரர்களும், அவர்களின் சகாக்களும் பிரமாண்டமான அறிவிப்புக்களை விடுத்தனர்.

நாட்டில் இன்று என்ன நடக்கின்றது? பொருட்கள், சேவைகளின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்ட உணவு பொதிக்கான வவுச்சர் கூட இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு பற்றி திரும்பும் திசையெல்லாம் குரல் கொடுத்தனர். இன்று பட்டப் பகலிலேயே படுகொலைகள் அரங்கேறும் பயங்கர நிலை உருவாகியுள்ளது.

அதுமட்டுமா கடந்த ஆட்சியின்போது கம்பரெலிய திட்டம் உட்பட கிராமிய எழுச்சியை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை பொறுப்பேற்றிருந்த சிறு அளவிளான ஒப்பந்தக்காரர்களுக்கு கூட இன்னும் நிதி வழங்கப்படவில்லை. செய்த வேலைக்கான பணத்தை கேட்டால் திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது.

அரசியல் பழிவாங்கல், சுயாதீன ஆணைக்குழுக்களை ஒழித்து மீண்டும் ஏதேச்சாதிகார ஆட்சியை ஏற்படுத்தல் போன்ற நடவடிக்கைகளும் மறைமுகமாக இடம்பெற்று வருகின்றன. இதுவா மக்கள் எதிர்பார்த்த மாற்றம்?

இந்த அரசாங்கத்தில் இலக்கு எது? நோக்கம் என்ன என்பதெல்லாம் 60 நாட்களிலேயே தெட்டத்தெளிவாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலின்போது அவர்களுக்கு வாக்களித்தவர்களுள் நடுநிலையாக சிந்திக்ககூடியவர்கள் இதனை இன்று உணர்ந்துவிட்டனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் அவர்களிடம் ஒப்படைத்தால் நாட்டில் மீண்டும் இருண்ட யுகமே உருவாகும். எனவே, மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...