தமிழர்களின் போராட்டத்திற்கு கூட்டமைப்பு பலம் சேர்த்தது! ஸ்ரீநேசன் எம்.பி

Report Print Malar in அரசியல்

தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்த்த கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

தற்காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது எனும் கேள்விக்கு விளக்கமளிக்கும் வகையில் ஸ்ரீநேசனினால் இன்று செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில்,

இலங்கையில் தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீகமான குடி என்பதனையும், இந்த நாட்டுக்கே உரிய தேசிய இனம் என்பதனையும் சர்வதேசம் வரை நிலைநாட்டி வருகின்றது.

இலங்கைத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை அன்று தொட்டு இன்று வரை தீர்க்கப்படாமல் இருக்கின்றது. என்பதையும், அதனைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

சலுகைகளுக்காக தமிழர்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காத உண்மைக் தமிழ்க் கட்சியாக விளங்குகின்றது.

தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்த்த கட்சியாக இருந்தது, இருக்கின்றது.

2015இல் அமைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் போது, புதிய அரசியல் யாப்பு மூலமாக தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முயற்சியில் அதிகமான பங்களிப்பினை வழங்கியது.

அந்தவகையில் 200இற்கு அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தினை அரசியல் யாப்பு நிர்ணய சபையாக அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழிகாட்டியது.

மேலும் வழிநடத்தற்குழு, உபகுழுக்கள் என்பவற்றை அமைக்கவும். இடைக்கால அறிக்கையினை உருவாக்கவும் வழிகோலியது.

ஆனால், துரதிஷ்டவசமாக எதிர்த்தரப்பு அடிப்படைவாதிகள் சதிகளை மேற்கொண்டு அதனைக் குழப்பியதோடு, பேரின அடிப்படைவாதம் மூலமாக தேசிய இனப் பிரச்சினைக்கானத் தீர்வுக்கு முட்டுக்கட்டை போட்டனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதற்கும், அக் காணிகளை மக்கள் கையேற்பதற்கும் வழி செய்யப்பட்டது.

சிறையில் வாடிய 217 கைதிகளில் 130 கைதிகள் விடுவிக்கப்படக்கூடிய நல்லாட்சிக் கால சூழ்நிலையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்படுத்தியிருந்தது.

2015 - 2019 வரை ஆட்கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுத்தல்கள் என்ற நிலைமைக்கு முற்றுப்புள்ளி இடப்பட்டது.

ஆட்சியாளர்கள், ஏனைய அரசியல்வாதிகள், அராஜகர்கள், அதிகாரிகள் அனைவரையும் விமர்சனம் செய்யக்கூடிய ஊடகச் சுதந்திரம் உருவாக்குவதற்கு வழிகோலியது.

பாரிய குற்றமிழைத்தும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படாமல் இருந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், தண்டிக்கவும் கூடிய ஜனநாயக சூழல் உருவாக உதவியமை.

பயமும் - பயங்கரமும், அராஜகமும் - அடாவடித்தனமும், கொடுமையும் - கொடூரமும் இருந்த நாட்டுச் சூழ்நிலையினை நல்லாட்சிச் சூழல் மூலமாக ஜனநாயகமும், சட்ட வாட்சியும் மாற்றியமைப்பதில் பங்காளிகளாக எமது கட்சியும் இருந்தமை.

ஊரக எழுச்சித் திட்டம், துரித அபிவிருத்தித் திட்டம், ரண் மாவத் திட்டம், வீதி புனரமைப்புத் திட்டம், குடிநீர் வழங்கல் திட்டம், பன்முக வரவு செலவுத் திட்டம் போன்றவற்றைப் பயன்படுத்தி வீதிகள் புனரமைப்பு, கோவில்கள், தேவாலயங்கள் புனரமைப்பு, மைதான அபிவிருத்தி, பாடசாலை பௌதிக அபிவிருத்தி, விவசாயக் கிணறுகள் அமைத்தல் போன்றவற்றினை மேற்கொண்டிருந்தோம்.

உதாரணம் பதவிக் காலம் முழுமையாகாத நிலையில் 04 ஆண்டுகள் காலத்தில் ஏறத்தாழ ரூபாய் 760 மில்லியன் (76 கோடி) என்னால் மேற்படி அபிவிருத்திகளைச் செய்ய முடிந்தது. இது போன்று எமது 15 நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் அபிவிருத்திகள் செய்திருப்பார்கள்.

வீடமைப்பு நிர்மாண அமைச்சு மூலமாக எமது மாவட்டத்தில் சுமார் 7000 வரையிலான வீடுகளைக் கட்டுவதற்கான செயற்பாடுகளை (NHDA) மூலமாக முன்னெடுப்பதில் பங்கு கொண்டோம்.

இதேபோன்று வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொண்டிருந்தோம். ஆட்சிமாற்றத்தின் பின்னர் அத்திட்டத்தின் முன்னெடுப்பு தொடராதுள்ளது.

தடைப்பட்ட நிலையில் முடக்கப்பட்டிருந்த கிராமியப் பால அமைப்புத் திட்டத்தினை பல முயற்சிகளின் மூலம் முன்னெடுத்து மட்டக்களப்பில் பல பாலங்களை முடித்துள்ளோம். இதேபோன்று வடக்கு - கிழக்கு மாகாணங்களிலும் பல கிராமியப் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

விளையாட்டுக் கழகங்கள், இளைஞர்கள் கழகங்கள், மகளிர் சங்கங்கள், சிரேஷ்ட பிரசைகள் அமைப்புகள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், ஆலய பரிபாலன அமைப்புக்கள் போன்றவற்றின் வேண்டுகோள்களில் கணிசமானவற்றை நிறைவேற்றியுள்ளோம்.

2019ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடியுமான நிவாரண உதவிகளை செய்திருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...