வடக்கு, கிழக்கு இணைந்தது தான் த.தே.கூட்டமைப்பின் கொள்கையென்றால் போட்டியிட்டிருக்கவே கூடாது

Report Print Kumar in அரசியல்

வடக்கு, கிழக்கு இணைந்தது தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொள்கையென்றால் கிழக்கு மாகாணசபை தேர்தலில் அவர்கள் போட்டியிட்டிருக்க கூடாது என கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான கே.சிவநாதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கொள்கையில்லாத கொள்கை ஒன்றையே கொண்டிருக்கின்றது.

எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஒரு பொது சின்னத்தில் போட்டியிடுவதற்காக இதுவரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான சுதந்திர ஐக்கிய முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரன் தலைமையிலான கட்சி, அதனை விட ஏற்கனவே மாகாணசபையிலும், நாடாளுமன்றத்திலும் ஆசனங்களை பெற்றிருந்த சமூகத்தில் செல்வாக்கான உறுப்பினர்களும் கூட எங்களுடன் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழர்களின் அரசியலை பொறுத்தவரை நாங்கள் 70 வருடங்களுக்கு முன்னர் பேசிய பேச்சை இன்றும் பேசுவது எம்மை பொறுத்தவரை அர்த்தமற்ற விடயமாகும்.

அதாவது களநிலைமைக்கு ஏற்றவாறு எமது அரசியலை கொண்டு செல்வதே புத்திசாலித்தனமாகும். ஆனால் எமது தமிழர்களின் அரசியல் பிரச்சினையானது அத்தியாவசியமான பிரச்சினையாகும்.

நிச்சயமாக அதற்கு தீர்வு காணப்படவேண்டும். அதற்கான தீர்வை காண்பதற்கு சாத்தியமான நடைமுறைகளை நாங்கள் பின்பற்ற வேண்டும்.

எங்களுடைய தமிழ் மக்களின் பிரச்சினை உண்மையில் தீர்க்கப்பட வேண்டுமானால் தென்னிலங்கை சிங்கள மக்களின் ஆசீர்வாதம் அவசியமாகும். அதேபோன்று தேசிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற முக்கிய கட்சிகளின் ஆதரவு எங்களுக்குத் தேவையாகும். ஒரு கட்சியை எதிர்த்து இன்னொரு கட்சியை தூக்கி எங்களுடைய இலக்கை நாம் அடைய முடியாது.

என்னைப் பொறுத்தவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உண்மையில் ஒரு அரசியல்வாதியல்ல. அவர் ஒரு பாதுகாப்பு செயலாளராக இருந்த காரணத்தால் அவரை ஒரு சிறந்த நிர்வாகியாக நான் பார்க்கின்றேன்.

எல்லா கட்சிகளையும் ஒன்றிணைக்கும் போது தமிழரசுக் கட்சியையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அழைத்து பேசியிருந்தோம். பிள்ளையானுடன் எங்களால் ஒன்று சேர்ந்து செல்ல முடியாது என்பது அவர்கள் கூறிய காரணமாகும்.

அவர்கள் கொள்கையில் தங்களிடமிருந்து வித்தியாசமாக இருக்கின்றனர் என கூறினர். வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு மாநில சுயாட்சியை நோக்கியதே எங்களுடைய பயணமாகும். இந்த நோக்கமோ, கொள்கையோ அவர்களிடமில்லை.

வடக்கு, கிழக்கு இணைந்ததான ஒரு தீர்வே எட்டப்பட வேண்டுமென்பதில் கிழக்குத் தமிழர் ஒன்றியமும் குறியாக இருக்கின்றது.

அதே நேரம் எம்மை பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கொள்கையில்லை. ஏனென்றால் வடக்கு, கிழக்கு இணைந்தது தான் அவர்களின் கொள்கையென்றால் கிழக்கு மாகாணசபை தேர்தலில் அவர்கள் போட்டியிட்டிருக்க கூடாது.

கிழக்கு மாகாணம் வேறு வடமாகாணம் வேறு என நாங்கள் தனியாகப் போட்டியிட்டு அதில் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ள முடியுமென்றால் பிறகு எவ்வாறு வடக்கு, கிழக்கு இணைந்த கொள்கையில் தங்கியிருக்க முடியும்.

இவர்களுக்கு கொள்கையில்லாத கொள்கை ஒன்றே உள்ளது என நான் கருதுகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest Offers