பொதுத்தேர்தலின் பின்னர் தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்:கருணா

Report Print Varunan in அரசியல்

பொதுத்தேர்தலின் பின்னர் பட்டதாரிகளுக்கு நியமனம் கிடைக்கும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் கந்தசுவாமி கோயில் அருகில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய ஜனாதிபதியின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு, பட்டதாரிகளுக்கான நியமனம் என்பன பொதுத்தேர்தலின் பின்னர் நிறைவு பெறும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

இது தவிர இதில் தகுதியானவர்களுக்கு குறித்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். இந்த திட்டம் ஒரு சிறந்த திட்டம் என்பதை பலரும் பாராட்டுகின்றனர்.

இதற்காக புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு பாராட்டு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். தற்போது சர்வதேசத்தை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் எமது வடக்கு, கிழக்கில் பரவும் என்றால் பாரிய விளைவுகள் ஏற்படும்.

தலைநகரில் உள்ளவர்கள் அவதானமாக சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். அம்பாறை மாவட்டத்திற்கு நான் வந்து சேவை செய்வதென்பது யாரையும் தடுப்பதற்காக அல்ல என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன், என்று தெரிவித்துள்ளார்.