பசில் ராஜபக்ச நாட்டுக்கு வராமல் இருப்பது நல்லது: பேராசிரியர் நளின்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கும் பெரிய பிரச்சினை பசில் ராஜபக்ச எனவும் அமெரிக்காவில் இருக்கும் அவர் இலங்கைக்கு வராத வரை நல்லது எனவும் பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பேராசிரியர் நளின் டி சில்வா இதனைக் கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவில் உயர் மட்டத்தில் இருக்கும் சிலர் ஆட்சி நிர்வாகத்தை கொண்டு செல்ல தடையேற்படுத்துகின்றனர். பசில் ராஜபக்ச நாட்டுக்கு பெரிய பிரச்சினை.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை பெறாமல் இருக்கவும், அதற்கு பதிலாக தனது அதிகாரம் பரவியக் கட்சி ஒன்றை உருவாக்கும் தேவையுடன் பசில் ராஜபக்ச செயற்பட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் தலைமை பொறுப்பை ஜனாதிபாதி கோட்டாபய ராஜபக்ச ஏற்க வேண்டும் எனவும் நளின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் விமர்சித்துள்ள நளின் டி சில்வா, 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வர மகிந்த ராஜபக்ச முக்கிய பங்காற்றியதை மறக்கக் கூடாது.

19ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த மைத்திரிபால சிறிசேன பின்னர் அது குறித்து கவலை வெளியிட்டாலும், மகிந்த ராஜபக்ச குறைந்தது நடந்த தவறுக்கு இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நளின் டி சில்வா கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக சிங்கள பௌத்த அமைப்புக்களை இணைந்து இனவாத நிலைப்பாட்டை போசித்து வந்தார். பசில் ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரை தொடர்ந்தும் எதிர்ப்பதாக காட்டிக்கொள்ளும் அவர், கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவானவராக குரல் கொடுத்து வருகிறார்.

எனினும் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அரசியல் அவதானிகள், இது கோட்டாபய ராஜபக்ச தரப்பினால், மகிந்த - பசில் தரப்புக்கு கொடுத்துள்ள கொள்கை ரீதியான தாக்குதல் எனக் கூறியுள்ளனர்.