நாடாளுமன்ற தேர்தலில் ரெலோ சார்பில் களமிறங்கவுள்ளவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Report Print Kumar in அரசியல்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளவர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயற்குழு கூட்டத்திலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இந்த கூட்டம் மட்டக்களப்பில் உள்ள கட்சி தலைமையகத்தில் ஆரம்பமானது.

இதில் கட்சியின் பிரதி தலைவரும், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்வரும் காலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவற்றினை எதிர்கொள்ளுதல், கட்சியின் வேட்பாளர்களை அறிவித்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எட்டு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் இரு உறுப்பினர்கள் களமிறங்கவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவுள்ள இரண்டு வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன.

அதன்படி கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி தலைவரும் சட்டத்தரணியுமான என்.கமலதாஸ் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Latest Offers

loading...