இறுதி முடிவை எடுக்க நாளைய தினம் கூடுகின்றது ஐ.தே.க. செயற்குழு

Report Print Rakesh in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் நாளைய தினம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட அவருக்கு ஆதரவான உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என அறியமுடிகின்றது.

கடைசியாக நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தை இவர்கள் புறக்கணித்திருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பநிலை 90 சதவீதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் நாளைய மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் பிரச்சினை முற்றுப்பெறும் என அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் அமையவுள்ள பரந்துபட்ட அரசியல் கூட்டணியின் தலைமைப் பதவியையும், வேட்புமனுக் குழுவின் தலைவர் பதவியையும் சஜித்துக்கு வழங்குவதற்கு ரணில் அணி இணக்கம் தெரிவித்துள்ளது.

எனினும், புதிய கூட்டணியின் செயலாளராக யாரை நியமிப்பது என்பதிலேயே தற்போது சிக்கல் நிலை உருவாகியுள்ளது.

ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிப்பதற்கு சஜித் அணியும், ரவி கருணாநாயக்க, நவீன் திஸாநாயக்க, தயா கமகே ஆகிய மூவரில் ஒருவரை நியமிப்பதற்கு ரணில் அணியும் முயற்சிக்கின்றது.

இது தொடர்பில் இரு அணிகளுக்கும் இடையில் பேச்சுகள் தொடர்ந்தன. எனினும், நாளை நடைபெறவுள்ள ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே புதிய கூட்டணியின் செயலாளர் யார் என்ற விபரம் தெரியவரும்.

ஐ.தே.கவின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டிருந்த சரத் பொன்சேகா, ரோஸி சேனாநாயக்க, அஜித் பி. பெரேரா, இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் ஆகியோரை மீளவும் செயற்குழுவில் இணைத்துக் கொள்வது தொடர்பிலும் நாளை முடிவெடுக்கப்படும்.

Latest Offers

loading...