கட்சியின் புதிய பெயர் தொடர்பில் வீ.ஆனந்தசங்கரி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம்

Report Print Yathu in அரசியல்

எமது கட்சியின் ஆரம்பகால பெயரை எவரும் உபயோகிக்க முயற்சிப்பது கட்சியினுடைய வளர்ச்சியை மிகக் கடுமையாக பாதிக்கும் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியை தமிழர் ஐக்கிய முன்னணியாக பெயர் மாற்றம் செய்யும் கோரிக்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பிலான கடிதமொன்றை தமிழர் விடுதலை கூட்டணி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று அனுப்பி வைத்துள்ளது.

அக் கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில்,

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் பெயர்மாற்றம் செய்தல் தொடர்பாக தங்களின் இலக்க கடிதம் தொடர்பாக தமிழர் விடுதலை கூட்டணி தனது எதிர்ப்பினை வெளியிடுகின்றது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும், அதிலிருந்து 1949ஆம் ஆண்டு பிரிந்து சென்ற குழுவினரால் ஆரம்பித்து இயங்கிவந்த தமிழரசு கட்சியும் மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்திருந்தன.

1972ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி திருகோணமலையில் இவ்விரு கட்சிகளின் உறுப்பினர்களும் கூடி இரு கட்சியையும் இணைத்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரை சூட்டி இயங்க ஆரம்பித்தனர்.

இப் புதிய கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்களாக இரு கட்சி உறுப்பினர்களும் மற்றும் பலரும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். சா.ஜே.வே செல்வநாயகத்தின் தலைமையில் புதிய நிர்வாக குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

1976ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய கட்சியின் பெயர் தமிழர் விடுதலைக் கூட்டணி என (TULF) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தொடர்ந்து இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி அமோக வெற்றியீட்டியது. இருப்பினும் தொடர்ந்து தேவைப்பட்ட வேளைகளில் இப்பெயர் மாற்றம் பற்றி தெரிவித்து வந்துள்ளோம்.

திருவாளரகள் சா.ஜே.வே.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆகியோரால் புதிய பெயர் மாற்றப்பட்டமையால் போலும், அதற்குரிய செல்வாக்கை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமக்காக ஆக்கிக்கொள்ள முனைவது போல் தெரிகின்றது.

ஓரிரு சந்தர்ப்பங்கள் தவிர்ந்து பல சந்தர்ப்பங்களில் இக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மாறாகவே செயற்பட்டு வந்துள்ளது. 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய செயற்பாட்டை முறியடிக்க இரா.சம்பந்தனின் தலைமையில் இயங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது.

ஜனநாயக பாரம்பரியத்தை மீறி செயற்பட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியை அத்தேர்தலில் போட்டியிட விடாது சதி செய்தமையால், அக்கட்சி குறித்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அத்தேர்தலிலேதான் தமிழ்ப் பகுதிகளிலே ஜனநாயக கோட்பாடுகள் முற்றாக குழிதோண்டி புதைக்கப்பட்டது. அது மாத்திரமல்ல, தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்ட வேளையில் இயங்கி வந்த ஆயுதக்குழுக்களில் ஒன்றேனும் எதுவித ஒத்துழைப்பும் கொடுக்காமல் தமிழர் ஐக்கிய முன்னணியை செயற்பட விடாது தடுக்க முயற்சித்து வந்தமை உலகறிந்த உண்மை.

நான் இங்கு விசேடமாக குறிப்பிட விரும்புவது யாதெனில், எமது கட்சியின் ஆரம்பகால பெயரை எவரும் உபயோகிக்க முயற்சிப்பது கட்சியினுடைய வளர்ச்சியை மிகக் கடுமையாக பாதிக்கும்.

அதனால் இப்பெயரை உபயோகிக்கும் உரிமை எமது கட்சியினுடையதாக இருக்க வேண்டும். அவ்வாறு மாற்றம் செய்யப்படால் எமது கட்சியின் வரலாற்றையும், வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதால் இப்பெயர் மாற்றும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers

loading...