72ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாமைக்கு இதுவே காரணம்..?

Report Print Kanmani in அரசியல்

இலங்கையின் 72ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு நேற்றைய தினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் போது தமிழில் தேசிய கீதம் பாடப்படாமை தொடர்பில் பல தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

தமிழில் தேசிய கீதம் பாடவில்லை எனும் கோஷம் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது. அதனை விட சிறந்த நல்லிணக்கம் நேற்றைய தினம் ஏற்கெனவே உருவாகிவிட்டது.

தமிழில் தேசிய கீதம் பாடவில்லை என்று கோஷம் எழுப்பும் தரப்பினர், நேற்றைய 72ஆவது சுதந்திர தின விழாவில் மிகச் சிறந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்திய விடயத்தை மறந்து விட்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு சுருக்கம், ஜனாதிபதியின் தமிழ் மொழிப்பெயர்பாளர்களால் சுமார் 8 நிமிடங்கள் இடம்பெற்றது.

தமிழில் தேசிய கீதம் 3 நிமிடங்களே பாடப்படும். ஆனால் தமிழ் மொழி தெரியாத 98 வீதமானோர் நேற்றைய தினம் கலந்துக்கொண்டனர். 8 நிமிடம் ஒலிபரப்பான தமிழ் மொழிப்பெயர்ப்பினை சகித்துகொண்டமை சிறந்த நல்லிணக்கம் இல்லையா ?

நல்லிணக்கம் - சகவாழ்வு என்ன என்று தெரியாத, ஆழம் புரியாதவர்களே இந்த தேசிய கீத பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர்.

அவர்களுக்கு வேறு உள்நோக்கங்கள் இருப்பது தெளிவாகிறது. அரசியல் இலாபம் மட்டும் நோக்கில் சிலர் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவர். ஆனால் உண்மை நிலை என்ன என்பதை பொதுமக்கள் நன்கு அறிந்துகொள்வர். தற்சமயம் அதனை நன்கு தெரிந்துகொண்டிருப்பர் என்பது தெளிவு.

8 நிமிடங்கள் தமிழில் மொழிப்பெயர்ப்பு இடம்பெற்றமை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உரை பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தூதுவர்களாலும் நன்கு பாராட்டப்பட்டுள்ளது. அனைத்து வித மதத்தவரும் தமக்குரிய மத அனுஷ்டானங்களை சுதந்திரமாக மேற்கொள்ள முடியும். சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்க முடியும். ஊடக சுதந்திரம் முழு அளவில் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டுமல்லாது முழு நாட்டு மக்களுக்கும் தாம் ஜனாதிபதி என குறிப்பிட்டமை இவையெல்லாம் பல்லின சமூகங்கள் வாழும் இலங்கை நாட்டுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.

நேற்றைய தினம் ஜனாதிபதியின் உரையில் சிறுபான்மை மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. நாட்டில் பல இனங்கள் வாழ்கின்றன என்ற கோட்பாடு முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்தன.

இத்தகைய உயர்ந்த சிந்தனை நிச்சயமாக பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாட்டு பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் என்பதில் ஐயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

J.Yogaraj

Latest Offers