யானைச் சின்னமே எங்கள் தேர்வு! ரணில் அணி திட்டவட்ட அறிவிப்பு

Report Print Rakesh in அரசியல்

2020ம் ஆண்டு ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது என ரணில் ஆதரவு அணி உறுப்பினரான பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் அமையும் புதிய அரசியல் கூட்டணியின் சின்னம் தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழுவில் ஒப்புதல் பெறப்படவேண்டும். எமது கட்சியிலுள்ள 58 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தலைவரை (ரணில் விக்ரமசிங்க) சந்தித்தேன்.

யானை சின்னத்தின் கீழ்தான் போட்டியிட வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டனர். மீதமுள்ள 19 உறுப்பினர்களையும் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளேன்.

இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும்பாலான தேர்தல்களை யானை சின்னத்தின் கீழ்தான் ஐக்கிய தேசியக் கட்சி சந்தித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்களின்போது, பொதுவேட்பாளர்கள் களமிறக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே அன்னம் சின்னம் தேர்வாக இருந்தது.

எனவே, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தின்கீழ் போட்டியிட வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள பெரும்பான்மையான உறுப்பினர்களின் உறுதியான நிலைப்பாடாக இருக்கின்றது.

எதிர்வரும் 6ம் திகதி கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளது. இதன்போதும் இவ்விடயம் கலந்துரையாடப்படும். சஜித் தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் பெயர், சின்னம் ஆகியன தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே யானை சின்னமே தேர்வாக இருக்க வேண்டும் என ரணில் தரப்பு திட்வட்டமாக அறிவித்துள்ளது.

Latest Offers

loading...