இணக்கப்பாட்டை மீறினால் மீண்டும் பேச்சுவார்த்தை! சுதந்திர கட்சி அறிவிப்பு

Report Print Murali Murali in அரசியல்

கதிரைச் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மீறினால் மீள் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ இதனை தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சின்னம் குறித்து நீண்ட பேச்சுக்களை நடத்தினோம். தாமரை மொட்டுச் சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் ஆரம்பத்தில் விரும்பவில்லை.

இருந்த போதிலும் அதன் பின்னர் தேர்தலில் உள்ள கள நிலவரம் என்பவற்றை அவதானித்து மொட்டுச் சின்னத்தில் களமிறங்கிய தற்போதைய அரச தலைவரான கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க நடவடிக்கை எடுத்தோம்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் ஒப்பந்தங்களை செய்தோம். இடதுசாரி உட்பட 17 கட்சிகள் அடங்கிய கூட்டணியில் இணைந்து செயலாற்றினோம்.

அதனடிப்படையில் பொதுத் தேர்தலில் மொட்டுச் சின்னத்தை தவிர்த்து, கதிரைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான இணக்கம் எட்டப்பட்டது.

இந்த பொது இணக்கப்பாட்டை அவர்கள் மீறினால் அல்லது மாற்றினால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது அவசியம். தனித்து தீர்மானம் எடுக்க இந்த விடயத்தில் முடியாது.

இந்த 17 கட்சிகளிலும் பெசில் ராஜபக்ச, கோட்டாபய, மஹிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட சிரேஷ்ட தலைவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவருடனும் ஒன்றுசேர்ந்து பேச்சு நடத்தலாம்.

ஆனாலும் சின்னம் அல்லது வேறு விடயங்கள் இந்த பொதுத் தேர்தலில் முக்கியத்துவமாகவில்லை. மாறாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வருகின்ற பல்வேறு கோணங்களிலான சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெறுவதே அவசியமாகும்.

அதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான மிகப்பெரிய கூட்டணியொன்றை உருவாக்க வேண்டும். இதைவிடுத்து எமது கட்சித் தலைவர், மொட்டுக்கட்சி தலைவர் உள்ளிட்டவர்கள் மீது சேறுபூசும் பேச்சுக்களை பேசுகின்றார்கள்” என்றார்.

Latest Offers

loading...