பொதுஜன பெரமுனவுடன் தேன் நிலவை கொண்டாடும் அவசியமில்லை - சரத் பொன்சேகா

Report Print Steephen Steephen in அரசியல்

கட்சிக்குள் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை இன்னும் இருந்தாலும் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் புதிய கூட்டணியின் மூலம் நிறைவேறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

சஜித் பிரேமதாச தலைமையில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது என இணக்கம் காணப்பட்டுள்ளது. புதிய கூட்டணியின் தலைவர் என்ற வகையில் அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவோம்.

தலைவர்களின் நடத்தை காரணமாக கட்சிக்குள் பல எதிர்ப்புகள் வருகின்றன. இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பயன்படுத்திக் கொள்கிறது. எமது தவறுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். புதிய கூட்டணியின் மூலம் அந்த மாற்றம் ஏற்படும். கட்சியினருக்கு ஏற்பட்ட அநீதி எமக்கு தெரியும். உதவி செய்ய முடிந்தவர்கள் உதவி செய்யவில்லை.

இதன் காரணமாகவே கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது. இவற்றை பேசியதால், என்னை கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கினர்.

எதிர்காலத்தில் அப்படி செய்தாலும் பரவாயில்லை. புதிய கூட்டணியில் என்னால் இருக்க முடியும். கூட்டணியின் கீழ் நான் தேர்தலில் போட்டியிடுவேன். எமது கட்சியின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும்.

கோட்டாபயவுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர். எனக்கு கழுத்தில் சுருக்கிட்டுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. இப்படியானவர்களுடன் எப்படி அரசியலில் ஈடுபடுவது.

முதுகெலும்பற்ற மனநிலையில் என்னால் அரசியலில் ஈடுபட முடியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தேன் நிலவை கொண்டாடும் அவசியம் எமக்கில்லை.

கடந்த கால தேன் நிலவில் பாடம் கற்றுக்கொண்டோம். இந்த பாடத்தை சிலர் மறந்து விட்டனர்.

தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் 2025ஆம் ஆண்டில் எமது அரசாங்கத்தின் ஆட்சியை அமைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers