போராளிகள் அனைவரும் ஒன்றிணைவர்! விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை தெரிவிப்பு

Report Print Theesan in அரசியல்

எதிர்வரும் காலங்களில் போராளிகள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் தலைவர் மலரவன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்றிருந்தது.

அதன்பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மக்களை ஒருங்கிணைப்பதுடன் எதிர்வரும் தேர்தல் காலங்களில் நாம் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாக இன்று கலந்துரையாடியிருக்கிறோம்.

விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் அரசியல் வேலைத்திட்டமும், நகர்வுகளும் மக்களை உள்ளடக்கியதாக அவர்களின் ஆலோசனைகளை பெறும் வகையில் தான் பயணித்து கொண்டிருக்கிறோம்.

எதிர்காலத்தில் நாம் எப்படி பயணிப்போம் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான புதிய கூட்டணியிடம் இருந்து எமக்கு எந்தவித அழைப்புகளும் வரவில்லை.

அது தொடர்பாக நாங்களும் எந்த விருப்பத்தையும் தெரிவிக்கவில்லை. மக்களின் நலன்சார்ந்த வேலைதிட்டமொன்று தமிழ் நிலப்பரப்பில் நிறைவேறுமானால் எதிர்வரும் காலங்களில் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஆலோசித்து முடிவெடுப்போம்.

நாம் எந்த ஒரு தனிநபரையும் தாக்கக்கூடிய வகையிலான பேச்சினை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் எதிர்வரும் காலங்களில் போராளிகள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது என கூறியுள்ளார்.

இதன்போது கட்சியின் மகளீரணி தலைவி கருத்து கூறுகையில்,

நாம் போராளிகளாக இருக்கும் காலத்தில் பெண்கள் தனித்துவமாகவும் உயர்ந்த இடத்திலும் வைக்கப்பட்டிருந்தார்கள். தற்போது பெண்களிற்கான கௌரவம் பேணப்படுவதில்லை.

பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலை தொடர்பாக எந்த அரசியல்வாதிகளும் கருத்தில் கொள்வதில்லை.

எனவே நாம் விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையுடன் இணைந்து எமக்கான உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக பயணிப்போம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers