ரிஷாட், ஹக்கீம் போன்றோர் அரசியல்வாதிகள் அல்ல: எஸ்.பி. திஸாநாயக்க

Report Print Thirumal Thirumal in அரசியல்

பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மற்றும் வவுனியா மாவட்டங்களையும் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் வியூகம் வகுத்து வருகின்றது. இதன் ஓர் அங்கமாகவே ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் பஸில் ராஜபக்ச என்னை நுவரெலியாவில் களமிறக்கியுள்ளார் என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன், சந்திரசேகரனின் மகள் அனுசா சந்திரசேகரன் ஆகியோர் எமது அணியுடன் சங்கமிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அனைத்து தரப்புகளையும் இணைத்துக்கொண்டு - நாட்டை நேசிக்கும் கூட்டணியை அமைத்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கொத்மலை, பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எஸ்.பி. திஸாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி தேர்தலின் போது கிடைத்த பெறுபேறுகளில் அடிப்படையில் பொதுத்தேர்தலில் எமது அணியால் 129 ஆசனங்களைக் கைப்பற்ற முடியும்.

தேசிய பட்டியல் ஊடாகவே ஜே.வி.பிக்கு ஓர் ஆசனம் கிடைக்கும். மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, திகாம்பரத்தின் கட்சி, மனோ கணேசனின் கட்சி, ரிஷாத்தின் கட்சி, ஹக்கீமின் கட்சி ஆகியவற்றுக்கு 95 ஆசனங்களே கிடைக்கும்.

இந்நிலையில் நுவரெலியா, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் வெற்றிபெற்று ஆசன எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். அதற்காகவே பஸில் ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் நுவரெலியாவுக்கு வந்துள்ளேன்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் களம் புகுந்துள்ளேன். செத்து மடியும் வரை இங்கேயே அரசியல் நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, நுவரெலியா மாவட்ட மக்களை விட்டு விட்டு இனி எங்கும் செல்லமாட்டேன்.

அமைச்சர் தொண்டமான், சதாசிவம் ஆகியோர் எமது அணியில் உள்ளனர். மலையக மக்கள் முன்னணியை தற்போது வழி நடத்தும் இராதாகிருஷ்ணன், சந்திரசேகரனின் மகள் ஆகியோர் எம்முடன் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். எனவே, நுவரெலியாவில் வெற்றிநடை போட முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

நுவரெலியாவையும், வவுனியாவையும் கைப்பற்றினால் ஆசன எண்ணிக்கை 131 ஆக உயரும். அத்துடன், கம்பஹா, மாத்தறை, குருணாகலை போன்ற எமக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் மாவட்டங்களில் தலா ஒரு ஆசனம் வீதம் அதிகரித்துக்கொண்டால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்ற இலக்கை அடைந்து விடலாம்.

இலங்கையில் முஸ்லிம் மக்கள், இனம் மற்றும் மதத்தை மையப்படுத்தி கட்சிகளை ஆரம்பத்தில் ஆரம்பிக்கவில்லை. இந்தியாவின் தலையீட்டுன் உடன்படிக்கை செய்து கொண்டு 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தியதாலேயே இந்நிலைமை மாறியது. ஜே.ஆர் மற்றும் காமினி திஸாநாயக்க ஆகியோர் இதற்கு காரணம்.

முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது பாரதூரம் என்பதை உணர்ந்ததால் தான் தேசிய முக்கிய முன்னணியை அஸ்ரப் உருவாக்கினார். தமிழ், சிங்கள மக்களையும் கட்சிக்குள் உள்வாங்கினார். ஆனால், துர்திஷ்டவசமாக அவர் அகாலமரணமடைந்துவிட்டார்.

இன்று ரிஷாட் பதியுதீன், ஹக்கீம் போன்ற முஸ்லிம் அரசியல் வியாபாரிகளே இருக்கின்றனர். அவர்கள் அரசியல்வாதிகள் அல்லர் என தெரிவித்தார்.

Latest Offers

loading...