கொரோனா வைரசுக்கும் ரணிலே காரணம் என்று கூறியிருப்பார்கள் - இம்ரான் எம்.பி

Report Print Mubarak in அரசியல்

எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் கொரோனா வைரசுக்கும் ரணிலே காரணம் என கூறியிருப்பார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

இன்று திருகோணமலை, கோமரங்கடவல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இன்று இந்த அரசு மூன்றில் இரண்டு பற்றி பேசுகின்றனர். நாட்டை கட்டி எழுப்பவா, இவர்கள் மூன்றில் இரண்டு கேட்கிறார்கள்?

தமது அதிகாரத்தை பலப்படுத்தி நாட்டை ஒரு குடும்பம் தமது விருப்பம்போல் ஆட்சி செய்யவே, இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை மக்களிடம் கோருகின்றனர்.

கடந்த 2010ஆம் ஆண்டின் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியிலும் இவர்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்பட்டது.

அப்போது இந்த பெரும்பான்மையை வைத்து கொண்டுநாட்டை அபிவிருத்தி செய்தார்களா? இல்லை. ராஜபக்ச குடும்பம் வாழ்நாள் முழுவதும் ஆட்சியில் இருக்க பதினெட்டாம் திருத்த சட்டத்தை கொண்டுவந்தார்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அன்று எமது ஆட்சியில் இப்போதுள்ள அமைச்சர்கள் சிலர் மூளைக்கு சிறிதும் சம்மந்தமில்லாமல் சில குற்றச்சாடுகளை முன்வைத்தனர்.

அவர்கள் கூறும் பொய்களை உண்மைபோல் காட்ட இரண்டு ஊடக அலைவரிசைகள் அவர்களுக்கு உதவி புரிந்தன.

வைத்தியர் சாபிக்கு எதிரான குற்றச்சாட்டை ஆராய்ந்தால் உங்களுக்கு புரியும்.

இவர்களுக்கு மூளையில் ஏதோ கோளாறு காணப்பட்டது என்பதை. நல்ல வேளை இன்று ரணில் விக்ரமசிங்க பிரதமராக இல்லை.

அவ்வாறு இருந்திருப்பின் கொரோனா வைரசுக்கும் ரணிலே காரணம் என்று கூறியிருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...