ரணில் மற்றும் சஜித்திற்கு மூன்று வாரங்கள் காலக்கெடு! எச்சரிக்கும் திஸ்ஸ அத்தநாயக்க

Report Print Gokulan Gokulan in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான முரண்பாடுகள் இன்னும் மூன்று வாரங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க கோரிக்கை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதிக்குப் பின் எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படக் கூடும் என்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடி பொதுத் தேர்தலை பாதிக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கண்டிக்கு நேற்று மாலை விஜயம் செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க, அம்பிட்டிய மொண்டிபனோ விகாரைக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் விகாரையின் தலைமை தேரரை சந்தித்து ஆசி பெற்ற பின் கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

உண்மையிலேயே அனைவரும் ஒன்றிணைந்த ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்குவதே தற்போதைய தேவையாக உள்ளது.

இந்த அரசாங்கத்திற்கும், அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கும் எதிராக நாட்டில் தற்போது பாரிய எதிர்ப்பலைகள் எழும்பியுள்ளன.

அந்த எதிர்ப்பலைகளை எம்முடன் இணைப்பதே எமது அவசியமாக இருக்கின்றது. கட்சியின் செயற்குழுவும் பாரிய அரசியல் கூட்டணியை அமைத்து பொதுத் தேர்தலுக்கு தயாராகுமாறு அனுமதியும் அளித்திருந்தது.

விசேடமாக சஜித் பிரேமதாஸ தலைவராக நியமிக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கே பேசப்பட்டது. இதன்படி கூட்டணிக்கான ஆரம்ப செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும் கடந்த செயற்குழுக்கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவது பற்றிய தர்க்கங்கள் ஏற்பட்டதினால் இந்த செயற்பாடுகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

மார்ச் 2ஆம் திகதிக்குப் பின் எந்த சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தலைவர்களாக நாங்கள் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு தர்க்கங்களை ஏற்படுத்திக் கொண்டு காலத்தை வீணடிப்பதை மக்கள் எதிர்பார்க்கவில்லை.

ஆகவே அனைவரும் பொது இணக்கப்பாட்டிற்கு வந்து பொது எதிரணியை ஏற்படுத்தி வெற்றியிலக்கை அடைவதாகும்.

அவ்வாறு தாமதப்படுத்த எவராவது முனைந்தால் மக்களின் அபிலாஷைகளை தோற்கடிப்பதற்கான முயற்சியாகவே கருதப்படும்.

பல்வேறு விமர்சனங்கள் வெளியிடுவது சிறந்தது அல்ல. கருத்துக்கள் வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனாலும் இன்னும் 3 வாரங்களே இருக்கின்ற நிலையில் பேச்சுக்கள் இறுதிப்படுத்தப்பட்டு பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


you may like this video

Latest Offers

loading...