தேசியத் தலைவரின் வழிகாட்டலுக்கு முரணாக செயற்படும் விக்னேஸ்வரன்

Report Print Navoj in அரசியல்

தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் கட்சி இருக்க வேண்டும் என்பதே தேசியத் தலைவரின் வழிகாட்டல். இதனாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது விக்னேஸ்வரனும், அவரது சகாக்களும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் தமிழர்களுக்கு ஒரு அரசியல் கட்சி இருக்க வேண்டும் என்ற தேசியத் தலைவரின் கருத்துக்கு முரணானது என குறிப்பிட்டுள்ளார்.

கட்சி அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

தற்போது தமிழர் தரப்பில் பல்வேறு கட்சிகள் உதயமாகிக் கெண்டிருக்கினறன. மக்களுக்கு அக்கட்சிகளின் பெயர்களைச் சொல்வதற்கே முடியாமல் இருக்கின்றது. இதனால் ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி அவர்களின் கட்சி என்றே தான் சொல்லுவார்கள். இவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக உருவாக்கப்பட்ட கட்சிகள்.

இவர்கள் இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தைக் குறைக்க நினைக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலம் என்பது தமிழர்களின் பலம். இதனை விக்னேஸ்வரன் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு முன்பு மிகத் தெளிவாகச் சொன்னார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் தற்போதுள்ள ஒரே ஒரு பலம். அனைவரும் குறிப்பாக புத்திஜீவிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மேலும் பலம் கொடுக்கக் கூடிய விதத்தில் செயற்பட வேண்டும் என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான அவருடைய முற்போக்கான கருத்துக்கள் எங்கள் பலரைக் கவர்ந்தது. இதன் காரணமாக தான் எங்கள் கட்சிக்குள் ஈர்த்து முக்கிய பதவியைக் கொடுத்து அவருக்காக வாக்குக் கேட்டு அவரை வெல்ல வைத்தோம்.

வடமாகாணசபையின் முதல்வராக்கினோம். விக்னேஸ்வரன் அரசியலுக்குப் பழக்கப்படாதவர். இதனை நான் சொல்லும் போது அவருக்கும் அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கும் கோவம் வரும். ஆனால் அதுதான் உண்மை. அரசியலிலே மக்களோடு கலந்திருக்க வேண்டும். மக்களின் இன்ப துன்பங்களிலே கலந்துகொள்ள வேண்டும்.

அவர்களுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். விக்னேஸ்வரன் முதலில் சொன்னார் தான் அரசியல் சாராத அமைப்பினை ஏற்படுத்தப் போகின்றேன் என்று தமிழ் மக்கள் பேரவையை ஏற்படுத்தினார். ஆனால் அவ்வாறு சொல்லிவிட்டு அவரின் முழுமையான உருவத்தைக் காட்டி விட்டார்.

இது எங்களுக்கு ஏற்கனவே தெரியும் இப்படித்தான் வருவார் என்று. தற்போது அவ்வழியிலேயே ஒரு அரசியற் கட்சியினுடைய தலைவராக ஆகிவிட்டார். தான் அரசியல்வாதி அல்ல என்று கூறிக்கெண்டு அதற்குள்ளேயே வந்துவிட்டார். விக்னேஸ்வரனின் எதிர்பார்ப்புகள் பல வீணாகிப் போய்விட்டன.

கஜேந்திரகுமார் தன்னை ஒரு தலைவராக ஏற்று செயற்படுவார் என்று நினைத்திருந்தார். அது கனவாகப் பொய்த்து விட்டது. சுரேஸ் பிறேமசந்திரன் மிக அரசியல் அனுபவம் கொண்டவர் ஆனால் அவர் பேச்சாளராக இருந்த போது இராஜதந்திரிகள் எந்த எந்த விடயங்களையெல்லாம் வெளியில் சொல்லக்கூடாது என்று நினைத்து எங்களிடம் சொன்ன விடயங்களை அவர் வெளியில் சொன்னதன் காரணமாக மக்கள் அவர் மீது அதிருப்தியுற்று அவர் 2015 தேர்தலில் தோற்றுப் போனார்.

ஆனால் அதன் பின்னர் அவர் எங்களுடன் சேர்ந்து உழைத்திருக்கலாம். தேசியப் பட்டியல் கேட்டார். உடனடியாக அதை எங்களுக்குக் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. அவர் தொடர்ந்து எம்முடன் இருந்திருந்தால் காலப் போக்கில் அவ்விடயம் கிடைத்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கும்.

தமிழர் அரசியல் என்பது ஈழத்தைப் பொருத்தவரையில் வெறும் அபிவிருத்திக்கான அரசியல் அல்ல. எமது மக்களின் விடுதலைக்கான அரசியல். விடுதலையை அடைவதுதான் எமது முக்கிய இலக்கு என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers