அரசியலில் ஈடுபட தீர்மானித்துள்ள ரோஹன விஜேவீரவின் புதல்வர்

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியலில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் புதல்வர் உவிந்து விஜேவீர தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் தனக்கு மக்கள் விடுதலை முன்னணியினர் எந்த வகையிலும் அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் கிடைத்த வாக்குகளை பார்க்கும் போது மக்கள் விடுதலை முன்னணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அவர்கள் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் கொள்கைகள் மக்கள் உணரும்படியாக இருக்க வேண்டும். அவை மக்களுக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போகும் போது வாக்குகளின் அடிப்படையில் பெரிய குறையை காண முடிகின்றது. இது பெரிய வருதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் மக்கள் விடுதலை முன்னணியில் எந்த பதவிகளையும் வகிக்கவில்லை. அது எனது தந்தை உருவாக்கிய கட்சி. அந்த கட்சியில் உரிமை இருப்பதாக கருதி நான் பேசவில்லை. சாதாரண நபராக பேசுகிறேன். மக்கள் விடுதலை முன்னணி நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான கட்சி.

மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த நடைமுறைகள் தற்போது மாறியுள்ளன. அந்த மாற்றங்கள் நல்ல திசை நோக்கியதாக இருக்க வேண்டும்.

இது பௌத்த நாடு என்பது நான் ஏற்றுக்கொண்டுள்ள ஒன்று. இலங்கை பௌத்த சமய கலாசாரத்துடன் சம்பந்தப்பட்ட நாடு. மக்கள் விடுதலை முன்னணியினர் இதனை அரசியல் ரீதியாக புரிந்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்டில் அரசியலில் ஈடுபட வேண்டுமாயின் அதனை நன்றாக புரிந்துக்கொள்ள வேண்டும்.

மார்க்சிசம் மத சார்பற்றது. ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் காரணமாக அது மத சார்பற்றதாக மாறுகிறது. அதனை விடுத்து மார்க்சிசம் பௌத்த கலாசாரத்துடன் இருப்பது அல்ல.

எனது தந்தையின் பின்னர் எனது தாய் அரசியலுக்கு வரவில்லை. நான் வருவதற்கும் தடைகள் ஏதும் இல்லை. சாதாரண குடிமகன் என்ற வகையில் அரசியலில் ஈடுபடும் உரிமை உள்ளது. நான் அரசியல் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றுள்ளேன். எனது கலாநிதி பட்டமும் அரசியல் விஞ்ஞானம் மற்றும் சர்வதேச தொடர்புகள் சம்பந்தமானது.

நாட்டின் குடிமகன் என்ற வகையில் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. நான் ரோஹன விஜேவீரவின் மகனாக இருந்தாலும் மக்கள் விடுதலை முன்னணியின் மகன் அல்ல. அப்படி கூறி நான் அரசியலில் ஈடுபடாமல் இருக்கவும் உரிமையில்லை. அது எனது தெரிவு.

எவ்வாறான அரசியலை தெரிவு செய்கிறேன் என்பது எனது விருப்பம். நாட்டுக்காக கட்டாயம் கடமையை செய்ய வேண்டும். தேவையான நேரத்தில் முன்நோக்கி வர நான் தயாராக இருக்கின்றேன். அந்த கடமையை செய்ய மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே அவசியமில்லை. மார்க்சிச கட்சி அவசியமில்லை. அது எனது தந்தையின் கொள்கை.

இது நான். தற்போது நாட்டில் உருவாகியுள்ள தலைமை, எதிர்காலத்தில் உருவாக போகும் தலைமை என்பவற்றுடன் நவீன உலகத்துடன் பயணிக்க வேண்டும் எனவும் உவிந்து விஜேவீர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...