கடும்போக்கு இனவாதிகள் விரும்பும் புதிய அரசமைப்புக்கான முன்மொழிவுகள் கோட்டாபயவிடம் கையளிப்பு!

Report Print Rakesh in அரசியல்

புதிய அரசமைப்பொன்றை உருவாக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டன.

இன்று பிற்பகல் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற 'பலமானதொரு அரசு எமது அரசமைப்பொன்றுக்கான முன்மொழிவுகள்' என்ற கருப்பொருளின் கீழ் 'யுத்துகம' அமைப்பு தயாரித்த முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

எமக்கு உரிமையுள்ள பலமான அரசை மீண்டும் உருவாக்குதல், உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம் மற்றும் மக்கள் இறைமை, ஒற்றையாட்சியை நாட்டில் உறுதிப்படுத்தல், நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறைகளுக்கிடையில் அதிகார சமநிலை மற்றும் கடமையை முதன்மையாகக்கொண்ட சமூகம் என்ற ஐந்து இலக்குகளைக் கொண்டமைந்த முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

'யுத்துகம' அமைப்பின் தலைவர் கெவிது குமாரதுங்க, ஜனாதிபதியிடம் அம்முன்மொழிவுகளைக் கையளித்தார்.

கலாநிதி குணதாச அமரசேகர மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹார த சில்வா ஆகியோருக்கு நாட்டுக்காக நிறைவேற்றிய சேவையைப் பாராட்டி ஜனாதிபதியால் இதன்போது விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

சியம்மகா நிக்காயவின் அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் சங்கைக்குரிய மெதகம தம்மானந்த நாயக்க தேரரினால் விசேட அனுசாசன உரை நிகழ்த்தப்பட்டது.

நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதி சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர், சங்கைக்குரிய பெங்கமுவே நாலக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், அமைச்சர்களான பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, தயாசிறி ஜயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் புத்திஜீவிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Latest Offers

loading...