ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவை தடுக்கும் வகையிலான முக்கிய பேச்சுவார்த்தை

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவை தடுக்கும் வகையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இது தொடர்பான சந்திப்பு இன்று பிற்பகல் 2.30க்கு இடம்பெறவுள்ளது.

இதன்போது சஜித் பிரேமதாசவின் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய சக்தி முன்னணியின் இதயம் சின்னத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியினரும் போட்டியிடுவதா? அல்லது ஐக்கிய தேசிய முன்னணியில் இரண்டு தரப்பினரும் யானை சின்னத்தில் போட்டியிடுவதா? அல்லது ஐக்கிய தேசிய சக்திக்கு யானை சின்னத்தை வழங்கி அதன்கீழ் ஐக்கிய தேசியக்கட்சியினரும் போட்டியிடுவதா? என்பதற்கான விடை காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுசெயற்குழு நேற்று கூடி இது தொடர்பில் ஆராயவிருந்த போதும் பின்னர் அந்தக்கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஐக்கிய தேசியக்கட்சி மூன்று தடவைகள் பிளவைக் கண்டிருக்கிறது. காமினி திசாநாயக்க - லலித் அத்துலத்முதலி, சரத் அமுனுகம மற்றும் கரு ஜெயசூரிய தலைமையிலான அணி என்று மூன்று தடவைகள் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து உறுப்பினர்கள் வெளியேறி சென்றனர்.

இந்தநிலையில் சஜித் பிரேமதாச அணி இதில் நான்காவது இடத்தில் பட்டியலிடப்படுமா? என்பதை இன்னும் ஒரு வாரத்துக்குள் தெரிந்து கொள்ள முடியும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.