ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் எதிர்காலம் என்ன? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பதில்

Report Print TGTE Canada Media in அரசியல்

பத்து ஆண்டுகளை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தொட்டுவிட்ட நிலையில், ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் எதிர்காலம் என்னவென்ற மக்களின் கேள்விக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பதில் அளித்துள்ளது.

மக்கள் அரங்கம் என்ற பெயரில் சந்திப்புக்களை நடாத்தி வருகின்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், சமீபத்தில் ஜேர்மனியின் ஸ்ருட்காட், டோர்ட்முன்ட் ஆகிய நகரங்களில் கூட்டங்களை நடாத்தியிருந்தது. அமெரிக்காவிலும் நடாத்தியிருந்தது.

2009க்கு பின்னரான ஈழ விடுதலைப் போராட்டத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வகிபாகம் பற்றி அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் கருத்துரையினை வழங்க, சம அரசியல் நிலவரம் குறித்த உரையோடு பொதுமக்களின் கேள்விகளுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் இணையவழி பரிவர்த்தனையூடாக பதில் அளித்துள்ளார்.

புலம்பெயர் அமைப்புக்களிடையே ஒற்றுமை, தாயக மக்களுக்காக உதவிகள், முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவிகள், அரசியல் தீர்வு, இனப்படுகொலைக்கான நீதி, புலம்பெயர் இளையோர்களின் பங்களிப்பு, சர்வதேசத்தின் நிலைப்பாடு, இலங்கை அரசின் போக்கு என்று பொதுமக்களின் கேள்விகளுக்கு விளக்கமாக பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து தெரிவிக்கையில்,

அபிவிருத்தி என்ற பெயரில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையொன்று தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வருகின்றது.

இது தமிழர்களின் அடையாள அரசியலை, பண்பாட்டு உரிமைகளை இல்லாது செய்கின்றது. அபிவிருத்தி என்ற கவர்ச்சிகரமான சொல் மூலம் சர்வதேசத்தினை கவர்ந்திழுக்கின்ற உத்தியினை இலங்கை கையாளுகின்றது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த தந்திரத்துக்குள் சர்வதேசம் அகப்பட்டு செல்கின்ற நிலைதான் காணப்படுகின்றது. இது நமக்குள்ள பெரும் சவாலான விடயம்.

இலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் செல்லவோ, அதன் செயற்பாட்டுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டோ இருக்க முடியாது.

நமக்கான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே நம்து செயற்பாடுகள் இருக்க முடியும். அதன் அடிப்படையில் தான் எமக்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றினை அமைக்கும் முனைப்பில் நாம் உள்ளோம்.

சர்வதேச சக்திகள் கொழும்புடன் மட்டும் தமது தொடர்புகளை பேணுவருகின்றனர். ஆனால் இலங்கைத்தீவினை மையப்படுத்திய இந்தியப் பெருங்கடல்சார் அரசியலில் தமிழர் தேசம் கேந்திர முக்கியத்துவம் உள்ள ஒன்று என்ற வகையில், சர்வதேச சக்திகள் எம்முடனும் தொடர்புகளை பேண வேண்டிய நிலையே தேவையானது.

அவ்வாறான நிலையினை எட்டுவதற்கான ஒரு முனைப்பாக இந்த நாம் உருவாக்குகின்ற வெளிவிவகாரக் கொள்கை அமையும் என நம்புகின்றோம்.

தமிழர்களை ஒரு தேசிய இனமாகவோ, சிறுபான்மை இனமாகவோ ஏற்றுக் கொள்கின்ற நிலையில் இலங்கை அரசு இல்லை என்பதனை தான் அதன் செயற்பாடுகள் காண்பிக்கின்றன.

குறிப்பாக தமிழர் அரசியலையோ, தமிழர் அரசியல் தவைர்களையோ இலங்கை அரசு நிராகரித்து வருகின்றமை. இது இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான ஒரு அரசியல் வெளி இல்லை என்பதனையே வெளிக்காட்டுகின்றது.

இந்நிலையில்தான் நாங்கள் இலங்கைத்தீவுக்கு வெளியே சர்வதேச வெளியில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற வடிவத்தின் ஊடாக ஈழத்தமிழர்களின் அரசியலை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.