கூட்டணியை கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்னால் சென்று அழுது புலம்ப ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரில்லை என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தயாசிறி இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தேவை என்றால் இரண்டு தரப்பினரும் செய்துக்கொண்ட உடன்படிக்கையை இரத்துச் செய்ய முடியும்.
ஏன் பிரயோசனப்படுத்தி விட்டு, இவ்வாறு நன்றி அறியாத மனிதர்கள் போல் நடந்துக்கொள்கின்றனர் என்று நாட்டு மக்கள் எண்ணுகின்றனர்.
கூட்டணி அமைத்தே உடன்படிக்கையில் கைச்சாத்திட்டோம். எங்களை தனித்து போட்டியிடுமாறு அவர்கள் கூறுவார்களாயின் முதலில், உடன்படிக்கையை முடிவுக்கு கொண்டு வந்து மீதமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
பின்னால் சென்று கூட்டணியை அமைக்க வேண்டும் என்று அழுது புலம்ப நாங்கள் தயாரில்லை. கூட்டணி இன்றி மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் எனில் அவர்கள் உறுதியாக கூற வேண்டும்.
உறுதியாக கூறினால் நாங்கள் எவ்வாறு இதனை எதிர்கொள்வது என்பது வேறு வீதமாக சிந்திக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.