அதிகாரத்தை பரவலாக்கும் வேலைத்திட்டம் நிறுத்தப்படவில்லை: பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்

அதிகாரத்தை பரவலாக்குவது சம்பந்தமான வேலைத்திட்டம் எந்த வகையிலும் நிறுத்தப்படவில்லை எனவும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரதமர் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த போது இந்து பத்திரிகையின் செய்தியாளர் சுஹாசினி ஹைதருக்கு வழங்கிய நேர்காணலில் இதனை கூறியுள்ளார்.

13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரத்தை பரவலாக்குவது சம்பந்தமாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள பிரதமர்,

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக குரல் கொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பெரும்பான்மையான இலங்கையர்கள் ஏற்றுக்கொள்ளாத கோரிக்கைகளை முன்வைக்கின்றது. அதிகாரத்தை பரவலாக்குவது தொடர்பாக நடக்கும் பேச்சுவார்த்தை நின்று போக இது காரணமாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்தை பரவலாக்குவதை விட அபிவிருத்தி முக்கியத்துவம் கொடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளமை சம்பந்தமாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதில் எந்த பிரச்சினையும் இல்லை. 30 ஆண்டுகளாக துன்பத்திற்கு உள்ளாகியுள்ள வடக்கு, கிழக்கு மக்களுக்கு அபிவிருத்தி அவசியம். அதிகாரத்தை பரவலாக்கும் முன்னர் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடாதது குறித்து எந்த பிரச்சினைகளும் இல்லை. தற்போதும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துக்கொள்ளும் போது தேசிய கீதம் தமிழிலேயே பாடப்படுகிறது. தேசிய வைபவங்களின் போது தேசிய கீதம் ஒரு மொழியில் பாடப்படும். இலங்கையை விட பல மொழிகள் பேசப்படும் இந்தியாவில் தேசிய கீதம் ஒரு மொழியில் மாத்திரமே பாடப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரதமர், இந்த திருத்தச் சட்டம் காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான அதிகாரங்களில் தெளிவில்லை. இதனால், அந்த திருத்தச் சட்டத்தில் இருந்து விடுப்பட வேண்டியது முதலாவது பணி. இது தொடர்பாக அரசியலமைப்பு நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.