குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை அரசாங்கம் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதி, உண்மை மற்றும் நட்ட ஈட்டை வழங்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

இது தொடர்பில் இன்று மன்னிப்புசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை ஆழ்ந்த துக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எனினும் இன்னும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அதிகாரிகள் கூறமறுத்து வருகின்றனர் என்று சர்வதேச மன்னிப்புசபையின் ஆசியப்பிராந்திய பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இன்று உலகில் பலரும் காதலர் தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

எனினும் இலங்கையில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகள் தமது உறவுகளுக்காக இன்று பேரணி நடத்துகின்றனர் என்று மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் 1980 ஆம் ஆண்டில் இருந்து 100000 வரையிலானவர்கள் காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இலங்கையின் அதிகாரிகள் காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் விடயத்தில் குற்றமிழைத்தவர்களை நீதிக்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார்.