ரணிலுக்கு இன்று நள்ளிரவு வரை கால அவகாசம் வழங்கிய சஜித் அணி

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பல கட்சிகள் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலர் உருவாக்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு யானை சின்னத்தை வழங்கவில்லை என்றால், கட்டாயம் இதயம் சின்னனத்தில் போட்டியிடுவது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழு இன்று தீர்மானித்துள்ளது.

புதிய கூட்டணியின் சின்னமாக யானை சின்னத்தை வழங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று நள்ளிரவு 12 மணி வரை கால அவகாசத்தை வழங்கவும் நள்ளிரவுக்கு பிறகு இறுதி முடிவு கிடைக்காது போனால், மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான இறுதி தீர்மானங்களை எடுப்பதற்காக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழு சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று கூடி இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை பொதுத் தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பாக தீர்மானம் எடுப்பதை நாளுக்கு நாள் ஒத்திவைக்க கூடாது என இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், ஒரு அணியில் போட்டியிட முடிந்தால், அவ்வாறு போட்டியிடவும் இதனை எதிர்க்கும் நபர்கள் இருப்பார்களாயின், அவர்களை பற்றி சிந்திக்காது தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி காலம் தாழ்வதால், தேர்தலுக்கு தயாராக காலம் இருக்காது எனவும் துஷார இந்துனில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். இதனையடுத்து நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.