புற்று நோய் ஊசி மருந்தில் ஒரு லட்சம் ரூபாய் தரகு பணம் பெற்ற மருத்துவர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

மருந்து விலைகளை கட்டுப்படுத்துவதற்கு முன்னர் புற்று நோய்க்கான ஊசி மருந்து ஒன்றை பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தரகு பணம் கிடைத்ததாகவும் இதனை தடுத்து நிறுத்தியதன் காரணமாகவே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தனக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை முன்வைத்து வருவதாகவும் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புற்று நோய்க்கான ஒரு ஊசி மருந்து இருந்தது. அதன் விலை 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய். ஏன் இந்த மருந்து இவ்வாறு அதிகவிலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று நான் யோசித்தேன். தேடிப் பார்க்கும் போது அது மருந்தின் வர்த்தக பெயர் மாத்திரமே.

போட்டியில்லை. மருந்து நிறுவனம் கூறும் விலையை இலங்கை அரசு செலுத்தியது. இதனால், இந்த மருந்துக்கு இணையான மருந்து உலகில் இருக்கின்றதா என்று தேடிப்பார்க்குமாறு நான் தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையிடம் கூறினேன். அவர்கள் அந்த மருந்துகளை முன்வைத்தனர்.

அப்போது விலை மனு கோரும் போது போட்டி ஏற்பட்டது. போட்டியில் கலந்துக்கொண்ட பல்தேசிய நிறுவனம் ஏனைய நிறுவனங்களுடன் போட்டியிட அந்த மருந்தின் விலையை 2 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து, ஒரு லட்சத்து 65 ஆயிரமாக குறைத்தது. இதனையடுத்து ஒரு ஊசி மருந்தின் விலையை ஒரு லட்சத்து 15 ஆயிரமாக மீண்டும் குறைத்தது.

அதுவரையும் நாட்டின் அரசாங்கம் பணத்தை மக்களுக்கு செலவிடவில்லை, மருந்து நிறுவனங்களுக்கே செலவிட்டது. மருந்தின் விலை குறைக்கப்பட்டதும் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் அந்த மருந்து தரமற்றது என்று கோஷமிட ஆரம்பித்தனர்.

ஐந்து வருடங்கள் அந்த மருந்து பயன்படுத்தப்பட்டது இன்று வரை அந்த மருந்தால் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விசேட மருத்துவ நிபுணர்களும் இந்த மருந்தில் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளனர் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.