சவேந்திர சில்வாவின் தடை அமெரிக்காவின் எச்சரிக்கையா?

Report Print Ajith Ajith in அரசியல்

சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்ட தடை இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற விவாதத்தில் இலங்கையின் பிரதிநிதி சேனுகா செனவிரட்ன வெளியிட்ட கருத்துக்கு பின்னரே இந்த தடை அறிவிப்பு வெளியாகியுள்ளமையால் இது அமெரிக்காவின் எச்சரிக்கை என்று ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் என்பவற்றுக்கு வெளியக சக்திகள் அழுத்தங்கள் அவசியம் இல்லை என்று சேனுகா குறிப்பிட்டிருந்தார்.

இது இலங்கையின் நல்லிணக்கம், சமாதானம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களை தடம்புரளச் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தற்கொலை குண்டுதாரிகளின் மூலம் விடுதலைப்புலிகள் ஆரம்பித்து வைத்த பயங்கரவாதமே இன்று சர்வதேசத்தில் சில குழுக்களால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற கருத்தையும் அவர் வெளியிட்டார்.

இந்தநிலையில் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு வெளிநாடுகள் அழுத்தங்களை பிரயோகிப்பதை விடுத்து தொழில்நுட்ப உதவிகளை வழங்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அவர் வெளியிட்ட கருத்துக்களை அடுத்து அடுத்த நாள் அதாவது பெப்ரவரி 14ம் திகதி சவேந்திரவுக்கு எதிரான தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரு எச்சரிக்கை என்று ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

எனினும் அமெரிக்காவின் நிர்வாக ஒழுங்கின் படி ஒவ்வொரு பிரிவுகளும் தமக்குரிய பணிகளை உரிய நேரத்தில் செய்யும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது என்பதை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சவேந்திர சில்வாவுக்கு தடை விதிக்க வேண்டுமானால் அவர் பதவியேற்ற அன்றே அவருக்கு தடை விதித்திருக்க முடியும்.

அத்துடன் எம்.சி.சி உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடும் என்று எதிர்பார்த்திருக்கும் அமெரிக்கா சந்தர்ப்ப அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கும் போக்கை வெளிப்படுத்தும் கொள்கையை கடைபிடிக்குமானால் சவேந்திர சில்வாவின் விடயம் போன்ற கடும்போக்குடைய பிரச்சினையில் கை வைத்திருக்காது என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையை தவிர ஏனைய நாடுகளில் தேசிய கொள்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதையும் ஆய்வாளர்கள் கோடிட்டுள்ளனர்.