கடந்த கால நல்லாட்சி அரசாங்கம் செய்யாத நல்ல பல வேலைத்திட்டங்களை எமது கோட்டாபய அரசாங்கம் செய்து வருகின்றதென தம்பலகாம பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உப தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார தெரிவித்துள்ளார்.
முள்ளிப்பொத்தானையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
பல அபிவிருத்திகளை கிராமிய மட்டம் என முன்னுரிமை அடிப்படையில் காபட் வீதி உள்ளிட்ட திட்டங்களை அரசு செய்து வருகிறது.
கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதொரு வரப்பிரசாதமாகும்.
எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் இலங்கை மக்கள் மீண்டும் நல்லதொரு முடிவுகளை எடுத்து பெரும்பான்மை சக்தியாக ஆட்சியமைப்போம்.
புதிய அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரில் தங்களது கிராமங்களை ஒன்றாய் இன,மத பேதமின்றி அபிவிருத்திகளை செய்யவிருக்கின்றோம். சமூகத்தின் வளர்ச்சிக்காக இவ்வாறான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.
இதனை நல்லாட்சி அரசாங்கம் செய்யத் தவறி விட்டது மக்களை கடந்த காலங்களில் ஏமாற்றியே வந்தார்கள். இந்த புதிய அரசாங்கம் புதிய திட்டங்களை வகுத்து கிராமிய அபிவிருத்திக்கு முன்னுரிமையளிக்கிறது.
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தொகுதியே அதிகமான வாக்குகளை கொண்ட தொகுதியாகும்.
தமிழ், முஸ்லிம் மக்கள் நன்குணர்ந்து வாக்குகளை எமக்கு இம்முறை அளிப்பார்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நடந்த பிழைகளை விட்டு விட்டு இம்முறை மூதூர் தொகுதியில் பொதுஜன பெரமுன வெற்றியடையும்.
இவ்வாறாக தொடர்ச்சியான வெற்றியால் எமது மாவட்டத்தையும் நல்லதொரு அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.