வரிச்சலுகை ஏமாற்றும் கண் துடைப்பு

Report Print Steephen Steephen in அரசியல்
189Shares

அரசாங்கம் பல வரிச்சலுகைகளை வழங்கிய போதிலும் அது மக்களை ஏமாற்றும் கண் துடைப்பாக மாறியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.

வழங்கிய வாக்குறுதியின் படி வரிச்சலுகைகள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இதற்கு நாடாளுமன்றத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்பதால், வரிச் சலுகை புஸ்வாணமாக மாறியுள்ளது.

இந்த வரிச்சலுகை, நிதி, பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய கடந்த நவம்பர் 29 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டது. இந்த வரிச் சலுகை டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிதியமைச்சர் வழங்கிய இந்த வரிச் சலுகையில் வற் வரி 15 வீதத்தில் இருந்து 8 வீதமாக குறைக்கப்பட்டிருந்ததுடன் தேசத்தை கட்டியெழுப்பும் வரியும் குறைக்கப்பட்டிருந்தது.

இதனை தவிர கடந்த ஜனவரி 21 ஆம் திகதி அரச செய்தி பணிப்பாளர் வெளியிட்டிருந்த அறிக்கையில், 2017 ஆண்டு இலக்கம் 24 உள்நாட்டு வருமான வரி சட்டத்திருத்தின் கீழ் மேலும் விசேட வரிச்சலுகைகளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 108 ஷரத்திற்கு அமைய இலங்கை அரசின் நிதி விவகாரங்கள் தொடர்பாக முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே இருப்பதால், அரசாங்கம் செலவிட தேவையான நிதி மற்றும் வரவு வரி அறவிட அனுமதியை வழங்க வேண்டியது நாடாளுமன்றத்தின் பொறுப்பு.

எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வரி வேலைத்திட்டத்திற்கு தேவையான அனுமதியை இதுவரை நாடாளுமன்றத்தில் இருந்து பெற்றுக்கொள்ளவில்லை. இதனால், வரிச் சலுகையின் சட்டரீதியான தன்மை தொடர்பில் பாரதூரமான பிரச்சினை இருப்பதாக துறைசார்ந்தோர் தெரிவித்துள்ளனர்.

வற் வரியை குறைக்கும் திருத்தச் சட்டமூலம் இன்னும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். இதனால் வற் வரி குறைப்பான சட்ட ரீதியாக செல்லாது எனவும் கூறியுள்ளார்.

அதேவேளை 300 மில்லியன் ரூபாய் வற் வரிச் சலுகையை வர்த்தமானி அறிவித்தல் மூலம் மாத்திரம் வழங்க முடியாது எனவும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே சட்டரீதியாக செல்லும் எனவும் வரி சம்பந்தமான துறையினர் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

அத்துடன் வற் வரி செலுத்துவோரின் பதிவை இரத்துச் செய்து, மீண்டும் அவர்களிடம் வற் வரியை அறவிடவும் அவர்களை பதிவு செய்ய அரசாங்கம் முயற்சித்த போதிலும் அது சட்டத்திற்கு முரணானது எனவும் அவர் கூறியுள்ளார். இதனால், வற் வரி திருத்தச் சட்டம் கட்டாயம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமையில், அரசாங்கம் மக்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கியதாக பெரிதாக பேசி போதிலும் அது வார்த்தைகளுக்கு மாத்திரம் வரையறையாகியுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நிதியமைச்சின் வரி தொடர்பான ஆலோசகர் தனுஜா பெரேரா, வரி குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதால், புதிய திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற தேவையான ஆவணங்களை நிதியமைச்சு நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.