அமெரிக்காவின் தடை குறித்து ஜனாதிபதி கருத்து வெளியிட வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய

Report Print Steephen Steephen in அரசியல்

தேசப்பற்றுக்காக கத்தியவர்கள், படையினருக்காக கண்ணீர் சிந்தியவர்கள் என எவரும் இராணுவ தளபதிக்கு அமெரிக்க விதித்துள்ள தடை பற்றி பேசுவதில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லயில் உள்ள ஜாதிக ஹெல உறுமய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடையை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இது நாட்டின் அபிமானத்திற்கு பெரிய கரும்புள்ளி. அரசாங்கம் அந்த விடயத்தில் வழங்கி வரும் பதில் குறித்து நாங்கள் திருப்தியடைய மாட்டோம்.

அமெரிக்க தூதுவரை அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் அமைச்சுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அது மாத்திரமே நடந்துள்ளது. ஈரான் இராணுவ பிரதானி கொலை செய்யப்பட்ட போது, அந்நாட்டின் அனைத்து மக்களும் வீதியில் இறங்கி அமெரிக்காவுக்கு எதிராக பல நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த கொலையானது ஈரானின் பாதுகாப்புக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதலுக்கு இணையானது என்பதே இதற்கு காரணம்.

அரசாங்கத்தில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் பலர், அமெரிக்கா குடியுரிமையை வைத்துள்ளனர். இவர்கள் நாட்டை உண்மையில் நேசிக்கின்றனர் என்றால், அமெரிக்காவுக்கு பதிலளித்திருக்க வேண்டும்.

நாட்டின் ஜனாதிபதி இது சம்பந்தமாக கருத்து வெளியிட வேண்டும். அவர் இந்த நாட்டின் முன்னாள் இராணுவ அதிகாரி என்பது மாத்திரமல்ல, நீண்டகாலம் அமெரிக்க குடியுரிமையை பெற்றிருந்தவர்.

கடந்த காலத்தில் தேசப்பற்றுக்காக கத்திய, படையினருக்காக கண்ணீர் சிந்திய எவரும் பேசுவதில்லை.

வசந்த பண்டார, குணதாச அமரசேகர, சரத் வீரசேகர, மாகல்கந்தே சுதத்த தேரர், பொதுபல சேனா போன்ற அமைப்புகள் ஏன் தற்போது பேசுவதில்லை.

உண்மையில் தேசப்பற்று இருக்குமாயின் தற்பொழுது இதற்காக குரல் கொடுங்கள். நாங்கள் எங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.