புதிய கூட்டணியின் அனைத்து பொறுப்புகளும் சஜித்திற்கு

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக உருவாக்கப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியின் சகல பொறுப்புக்களும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கும் பிரதான சக்திகளை ஒன்றிணைத்து விரிவான கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுவோம்.

இந்த கூட்டணிக்கு சஜித் பிரேமதாச தலைமை தாங்குவார். சஜித் பிரேமதாசவே பிரதமர் வேட்பாளர். அனைவரையும் இணைத்துக்கொண்டு ஒற்றுமையாக இந்த சவாலை எதிர்கொள்வோம். ஐக்கிய தேசியக் கட்சி இறுதி முடிவை எடுக்கும் முன்னர் ஊடகங்கள் கட்சிக்குள் கருத்து மோதல் இருப்பதாக மக்களுக்கு காட்டுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கருத்து மோதல்கள் இல்லை. சகலரது கருத்துக்களுக்கும் செவிமடுத்து, ஒற்றுமையாக தீர்மானத்தை எடுத்த கட்சி என இறுதியில் மக்கள் காண்பார்கள். சின்னம் தொடர்பாக பல நிலைப்பாடுகளை முன்வைத்தாலும் இறுதி முடிவுக்கு வந்துள்ளதாகவும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.