மார்ச் முதலாம் திகதிக்குப் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம்

Report Print Rakesh in அரசியல்

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கமைய மார்ச் முதலாம் திகதிக்குப் பின்னர் எந்த வேளையும் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார் சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கமைய நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு இருக்கும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக வினவி, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் சட்டமா அதிபருக்கு அனுப்பியிருந்த கடிதத்துக்கு அவர் அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போதைய நாடாளுமன்றத்துக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு 4 வருடங்களும் 6 மாதங்களும் பூரணமாகின்றது.

அதனால் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்குப் பின்னர் எந்த வேளையும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் அரசமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கமைய ஜனாதிபதிக்குக் கிடைக்கப்பெறுகின்றது என்றுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னர் கலைத்தல் மற்றும் தேர்தல்கள் நடவடிக்கைகள் தொடர்பாக வினவி, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பி இருக்கின்றார்.

ஜனாதிபதி உரிய காலத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்தால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியலைக் கோரும் திகதி, அதன் இறுதித் திகதி, பொதுத் தேர்தலை நடத்தும் திகதி, நாடாளுமன்ற சபை அமர்வு ஆரம்பமாகும் திகதி போன்ற விடயங்களை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பில் உள்ளடக்க வேண்டும் என்பதற்காவே ஜனாதிபதியின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு குறித்த கடிதத்தை அனுப்பியிருக்கின்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த வாரத்துக்குள் தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி செயலாளருக்கு அறிவிக்கவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.