ஐக்கிய தேசிய கட்சி எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் சவால் இல்லை - திலும் அமுனுகம

Report Print Steephen Steephen in அரசியல்
20Shares

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

யானை, இதயம், யானையின் வால் என எந்தச் சின்னத்தில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சவால் இல்லை.

இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உடைந்து போன இதயம் மாத்திரமே எஞ்சும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதியானது. ஜனாதிபதியின் நேரடியான தலைமைத்துவத்தை செயற்படுத்த வேண்டுமாயின் அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். அப்படியில்லை என்றால் அதனை செயற்படுத்த முடியாது.

இதனால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை ஜனாதிபதிக்கு வழங்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன். தகுதியான நபர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்க வேண்டும்.

வியத் மக அமைப்பு புதிய வேட்பாளர்களை நிறுத்துவது சிறந்தது. அனைத்து மாவட்டங்களிலும் வியத் மக வேட்பாளர்களை நிறுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. வியத் மக எடுக்கும் நடவடிக்கைகளை நான் விரும்புகிறேன்.

இலங்கை அரசியலில் பிரதான நீரோட்டம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ வேறு கட்சிக்கோ மாற்றங்களை செய்ய சந்தர்ப்பங்களை வழங்க முடியாது, எனவும் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.