சஜித் தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடும் குமார வெல்கம?

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதை எதிர்க்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர், சஜித் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்கப்படும் கூட்டணியில் இணைய தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முதன்மையாக இருந்து செயற்பட்டு வருவதுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதை எதிர்த்து சுயாதீனமாக செயற்பட போவதாக அறிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியில் இணைந்து போட்டியிட தயாராகி வருவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக அவர் அந்த கூட்டணியில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த குமார வெல்கம,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்ததாக சஜித் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த ஜனாதிபதித் தேர்தலில் செய்துக்கொண்ட உடன்படிக்கைக்கு அமைய செயற்படுவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதனால், பொதுஜன பெரமுன முன்வைக்கும் அனைத்து விடயங்களுக்கும் இணங்கி பேச்சுவார்த்தை நடத்துவது பயனில்லை என்பதால், பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஏற்படுத்திக்கொள்ள உள்ள கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இடையில் நாளைய தினம் விசேட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.