அமெரிக்கா இராணுவ தளபதிக்கு எதிராக போர் குற்றத்தை சுமத்துவது கேலிக்குரியது - உதய கம்மன்பில

Report Print Steephen Steephen in அரசியல்
140Shares

ஜப்பான், வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகள் மீது தாக்குதல் நடத்தி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை அழித்து கைகளில் இரத்தத்தை தோய்த்துக்கொண்ட அமெரிக்கா, இலங்கை இராணுவ தளபதிக்கு எதிராக போர் குற்றத்தை சுமத்துவது கேலிக்குரியது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

எந்த அடிப்படையும் இல்லாமலேயே அமெரிக்கா போர் குற்றத்தை சுமத்தி இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதித்துள்ளது.

அவரை எந்த நீதிமன்றம் குற்றவாளி எனக் கூறியது?. அவர் தனியாக போரில் ஈடுபடவில்லை. ஏன் அவருக்கு எதிராக மாத்திரம் இந்த குற்றச்சாட்டு?. பயங்கரவாதத்தை தோற்கடிக்க அவர் வழங்கிய முக்கியமான பங்களிப்பு காரணமாகவே இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால், அமெரிக்கா கடந்த 2001ஆம் ஆண்டு பயங்கரவாதத்திற்கு எதிராக ஆரம்பித்த உலக போர் பொய்யா?. அமெரிக்கா, ஜப்பான் மீது அணு குண்டை வீசி இரண்டு லட்சம் பேரை கொலை செய்து, பெருமளவிலானவர்களை காயமடைய செய்தது.

வியட்நாம் மீது தாக்குதல் நடத்தி 35 லட்சம் பேரை கொன்றது. ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து 15 லட்சம் பேரை கொன்றது. இவ்வாறு மக்களை கொன்ற அமெரிக்காவே தற்போது உலகில் மிகவும் மோசமான பயங்கரவாத்தை தோற்கடிக்க போரில் ஈடுபட்ட சவேந்திர சில்வாவுக்கு எதிராக போர் குற்றம் சுமத்துகிறது என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.