சவால்களை எதிர்நோக்கும் தாயக மக்களும் இன அழிப்புகெதிரான சர்வதேச போராட்டமும்!

Report Print Dias Dias in அரசியல்

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இறுதிக்கட்டப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் விடுதலை செய்யக்கோரி அவர்களது குடும்பத்தாரும், உறவினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் போராடி வருகிற சூழலில் இலங்கை அதிபரின் அறிவிப்பு உறவினர் மற்றும் நீதிக்காகப் போராடுவோர் உள்ளங்களில் இடியென இறங்கியிருக்கிறது.

இறுதிக்கட்டப் போரில் காணாமல் போனவர்களின் நிலை குறித்தறிய ஐ.நா. பெரு மன்றம் வரை சென்று தமிழ்ச் சமூகம் போராடி வருகிற நிலையில், இது குறித்து வாய் திறக்காது மௌனம் சாதித்து வந்த இலங்கை இனவாத அரசு,தற்போது அவர்கள் இறந்து விட்டதாக அறிவித்திருப்பதன் மூலம் ஈழத்தில் தாங்கள் நடத்திய இனப்படுகொலையை மீண்டுமொரு முறை ஒப்புக் கொண்டிருக்கிறது.

சிறிலங்காவில் நீதிக்காகப் போராடுபவர்கள், ஊடகவியலாளர்கள், பாதிக்கப்பட்ட உறவினர்கள் எந்தவித எதிர்ப்பு தெரிவித்தாலும் நசுக்கப்படும் தற்போதைய நிலைமை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்பு மோசமான நிலைக்கு செல்லும்.

எம் மக்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

போராடும் மக்களை அச்சுறுத்தி செயல் இழக்கச் செய்வதுடன் குற்றவியல் நீதி விசாரணைக்கு தேவைப்படும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்படும்.

எனவே இலங்கைக்கான சர்வதேச நீதி பொறிமுறை உருவாக்கப்பட்டு குற்றவியல் நீதி விசாரணை செயல்படத் தொடங்கினாலும் கூட பூரணமான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் இன்றி நீதியை வெளிக்கொண்டு வருவது அசாத்தியமாக்கப்படும்.

மேற்கண்ட விடயங்கள் மூலம் தமிழர்களால் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டுகின்ற சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறைக்கான வழித்தடங்களை ஆராய்ந்து பிரித்தானிய தமிழர்பேரவை (BTF) மற்றும் புலம்பெயர் சகோதர அமைப்புகள் தொடர்ந்தும் வலியுறுத்தி கொண்டிருக்கும்.

இவ்வேளையில் சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் என்ற சிறிலங்கா ஜனாதிபதியின் கூற்றானது தமிழர்களுக்கு வழங்க வேண்டிய நீதி சிறிலங்காவிடமிருந்து வரப்போவது இல்லை என்பதனை உலக நாடுகளுக்கு எடுத்து சென்று நீதிக்கான முன்னெடுப்புகளை வலுப்படுத்த வேண்டியது தமிழ் மக்களின் கடமை.

அந்த வகையில் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பின்வருமாறு,

1) பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சு மற்றும் பிரித்தானியாவில் முடிவெடுக்கும்அதிகார மட்டங்கள் என்பனவற்றோடு தொடர் சந்திப்புகள் நடைபெறுகின்றன.

2) அமெரிக்க வெளிவிவகார அமைச்சுடன் USTPAC, BTF, CTC அமைப்புகளின் பிரதிநிதிகளின் சந்திப்பு இடம்பெற்றதுடன், காத்திரமான நடவடிக்கைகளை பட்டியலிட்டு உடனடி மற்றும் எதிர்கால நகர்வுகளை திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடப்பட்டது.

3) தென் ஆப்பிரிக்காவின் வெளிவிவகார அமைச்சில் தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கை மற்றும் அரசியல் அபிலாசைகளை அடையும் வழிவகைகைகள் குறித்து ஆராயப்பட்டது.

4) இந்திய வெளிவிவகார அதிகாரிகள் மட்ட சந்திப்புகள் இடம்பெற்றதுடன் தமிழ் மக்களுக்கான ஆதரவு நிலையில் உள்ளவர்கள் உடனான சந்திப்புகள் மற்றும் கருத்துக் பரிமாற்றங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

தமிழ் மக்களுக்கான நீதி சம்பந்தமாக இந்தியாவின் ஆதரவு கோரப்பட்டதுடன் சிறிலங்கா அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

5) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் மார்ச் மாத அறிக்கை வெளியிடப்பட உள்ள நிலையில் தமிழ் மக்கள் கோரும் முக்கியமான அம்சங்களை உள்ளடக்குமாறு ATC, BTF, CTC மற்றும் USTPAC இணைந்த தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

6) ஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திரிகளுடன் தகவல் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

7) மனித உரிமை தொடர்பான கருத்துருவாக்கங்களை மேற்கொண்டு சர்வதேச தளங்களை தயார்படுத்தும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை (INGO) சந்தித்து அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சிறிலங்காவின் தற்போதைய அரசு எடுக்கக் கூடிய எதிர்வினைகள் என்பன ஆராயப்பட்டதுடன். சிறிலங்கா அரசிற்கெதிரான புதிய முன்னெடுப்புகளை பிரேரிக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

8) வழமைபோன்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் போர்க் குற்றங்கள் மற்றும் இன அழிப்பை புரிந்து கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விபரங்கள் கொடுக்கப்பட்டு எதிர்வரும் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

மதிநுட்பமும், செயல்திறமையும் அர்ப்பணிப்பும் உள்ளவர்கள் மேலும் இப்பெரும் பணியில் இணைந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அன்புடன் வேண்டிக் கொள்கின்றது.