த.தே.கூட்டமைப்பை சிதைத்து விட முயற்சி! சித்தார்த்தன்

Report Print Theesan in அரசியல்

த.தே.கூட்டமைப்பை சிதைத்து விட வேண்டும், பலவீனப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கங்களுடன் பல முயற்சிகள் எடுக்கப்படுவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அண்மையில் இடம்பெற்ற டெலோவின் 50ஆவது நிறைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டாலும் கூட நாங்கள் 2011ஆம் ஆண்டு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தோம்.

யுத்தம் முடிவடைந்த பின்னரான காலத்திலே தமிழ் மக்கள் மிக பலவீனமாக இருக்கிறார்கள். எனவே நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைய வேண்டும் என்று பலர் வலிந்து கூறினார்கள்.

அத்தோடு மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைய வேண்டும் என வலியுறுத்தி கூறியதாலும், ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டமையாலும் நாங்கள் அதில் இணைந்து கொண்டோம்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச ரீதியாகவும், இலங்கையிலும் தமிழர்களின் ஏக பிரதிநிதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்குரிய விடயங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

இன்று இந்த கூட்டமைப்பை சிதைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடனும், பலவீனப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடனும் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

ஒற்றுமை கட்சிகளுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமை அல்ல. அது மக்களுக்கு இடையே இருக்கின்ற ஒற்றுமை.

மக்கள் நிச்சயமாக ஒற்றுமையாகவே இன்றும் இருக்கிறார்கள் என்றும் இருப்பார்கள் என்றும் நம்பிக்கையிலேயே தொடர்ந்தும் நாங்கள் எங்களது விடுதலைக்கான பாதையிலே போய்க்கொண்டு இருக்கிறோம் என கூறியுள்ளார்.