விக்னேஸ்வரன் என்பவர் கூட்டமைப்பு தென்னிலங்கைக்கு விலைபோய்விட்டதாக விமர்சிக்கும் ஒரு மாயமான்!

Report Print Kumar in அரசியல்

விக்னேஸ்வரன் என்பவர் ஒரு மாயமான். தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் மக்கள் கொள்கையில் உறுதியாக இருக்கின்ற கஜேந்திரகுமாருக்கு பின்னால் வராமல் விக்னேஸ்வரனுக்கு பின்னால் செல்ல வைக்கின்ற ஒரு ஏமாற்று நாடகத்தினை முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோப்பாவெளியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

கருணா,பிள்ளையான்,கருணா போன்றவர்கள் அரசாங்கத்தின் மகுடிக்கு ஆடுபவர்களே தவிர அவர்களினால் எந்த முடிவினையும் எடுக்க முடியாது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இந்த அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கி இந்த அரசாங்கத்தினை பாதுகாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றார்களே தவிர பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையினை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அவர்களின் உறவினர்கள் வீதிகளில் கண்ணீருடன் அலைந்து வருகின்றனர்.அரசியல் கைதிகள் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு பத்து ஆண்டுகள் பாராமுகமாக இருந்ததன் காரணமாக மட்டக்களப்பினை சேர்ந்த இளைஞனை சிறையில் பலிகொடுக்க வேண்டிய நிலையேற்பட்டது.

இந்த அரசாங்கத்திற்கு ஐ.நா.வரை சென்று முண்டுகொடுத்து யுத்த குற்றவாளிகளை பாதுகாத்து தொடர்ந்து முண்டுகொடுப்பவர்களாக இந்த கூட்டமைப்பினர் இருந்து வருகின்றனர்.

பத்து ஆண்டுகளில் தங்களுக்கு வேண்டிய சலுகைகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் நடை பிணங்களாக இருக்கும் நிலையே இருந்து வருகின்றது.

நாங்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி எந்த அரசாங்கத்தினையும் ஆதரிக்கவோ,எந்தவொரு சர்வதேச சக்திகளின் தேவைக்காகவும் நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவினை எந்த அரசுக்கும் வழங்கப்போவது கிடையாது.

எமது பகுதிகளை திட்டமிட்டு புறக்கணித்து எமது மக்களை பொருளாதார ரீதியாக அழிக்க முற்படுகின்ற போது அந்த அரசாங்கத்தின் முகவர்களாக செயற்படுகின்ற வியாழேந்திரனாக இருக்கலாம்,கருணாவாக இருக்கலாம்,பிள்ளையான்குழுவாக இருக்கலாம் இவர்களினால் இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

ஏனென்றால் இவர்கள் இந்த அரசாங்கத்தின் முகவர்களாகும்.அவர்கள் அரசாங்கத்தின் மகுடிக்கு ஆடுகின்றவர்களே தவிர அவர்களினால் முடிவுகளை எடுக்க முடியாது.

நிமிர்ந்து நின்று அரசாங்கத்துடன் அவர்களுக்கு எந்த கருத்துகளையும் சொல்ல முடியாது. இவர்களுடன் செல்வதனால் எந்த மாற்றத்தினையும் மக்கள் ஏற்படுத்திக்கொள்ள முடியாது.

அடுத்ததாக விக்னேஸ்வரன் என்பவர் வந்தார்.அவரை நாங்கள் ஆரம்பத்தில் முழுமையாக நம்பினோம். அவரை வைத்து தான் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது.

2014ம் ஆண்டு அரசியலமைப்பினை உருவாக்கவிருந்த காலத்தில் ஒற்றையாட்சியினை நிராகரித்து தமிழ் தேசம் அங்கீகரிக்கும் சமஸ்டியை உருவாக்குவதற்கான அழுத்ததினை வழங்கும் வகையிலேயே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. அந்த அடிப்படையில் ஓரு தீர்வுத்திட்டமும் எழுதப்பட்டது.

ஆனால் இந்த விக்னேஸ்வரனோ தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக செயற்படுபவர் என தன்னை காட்டிக்கொண்டு தமிழ் மக்களின் அபிலாசை மீது பற்று கொண்டவர் என காட்டிக்கொண்டு தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்டத்தில் தமிழ் தேசம் இறைமை என்பதை உள்ளடக்குவதற்கு அவர் மறுத்துவிட்டார்.

தமிழ் மக்கள் பேரவை ஊடாக தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஒரு பேரெழுச்சியை விக்னேஸ்வரன் நாசமாக்கினார் குழப்பியடித்தார்.

இன்று விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை விமர்சிக்கின்றார். கூட்டமைப்பு தென்னிலங்கைக்கு விலைபோய்விட்டதாக கூறுகின்றார். ஆனால் இவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது. விக்னேஸ்வரன் கூட்டமைப்புடன் முரண்படுவது போன்று ஒரு நாடகமாடுகின்றார்.