சவேந்திர சில்வாவின் பயண தடை தொடர்பான கூட்டமைப்பின் கருத்துக்கள் வெறுக்கத்தக்கவை!

Report Print Kanmani in அரசியல்

இராணுவ தபளதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயண தடை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் அக்கட்சியின் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிடும் கருத்துக்கள் முற்றிலும் வெறுக்கத்தக்கவை என தகவல் மற்றும் தொடர்பாடல் இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பினை இல்லாதொழிக்க அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு இராணுவ தளபதி பாரிய பங்களிப்பு வழங்கினார்.

எதிர்வரும் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள இலங்கை தொடர்பான கூட்டத்தொடரினை இலக்காகக் கொண்டே இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஒருதலை பட்சமானது என்பதை வெளிவிவகார அமைச்சு கடுமையாக எதிர்த்துள்ளதுடன் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நெருக்கடி நிலைமையினை அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் வெற்றிக் கொள்ளும்.

புலம்பெயர் விடுதலை புலிகள் அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே சம்பந்தனும், சுமந்திரனும் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றார்கள்.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா விவகாரத்தில் இவர்கள் குறிப்பிடும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.