மைத்திரி - மகிந்த தரப்புக்கு வெட்கமில்லை - விஜித ஹேரத் எம்.பி குற்றச்சாட்டு

Report Print Steephen Steephen in அரசியல்
65Shares

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது ராஜபக்சவினர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு அமைய அவருக்கு மாத்திரமல்ல ராஜபக்சவினருக்கும் எந்த வெட்கமும் இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தாமரை கோபுரத்தை நிர்மாணித்த போது ராஜபக்சவினர் 200 கோடி ரூபாயை கொள்ளையிட்டுள்ளதாக தாமரை கோபுரத்தை திறந்து வைக்கும் சந்தர்ப்பத்தில் கூறிய மைத்திரிபால சிறிசேன, தற்போது மகிந்த ராஜபக்சவுடன் இணைந்துக்கொண்டுள்ளார்.

இதனடிப்படையில் தாமரை கோபுரத்தில் கொள்ளையிட்ட தரப்பும், குற்றம் சுமத்திய தரப்பும் ஒரு மேடையில் இணைந்துள்ளனர்.

பொதுத் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே சாய்ந்தமருது நகர சபையாக அறிவிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலின் பின்னர் அந்த நகர சபை கட்டாயம் உருவாக்கப்படும். ஜனாதிபதித் தேர்தலில் சாய்ந்தமருது நகர சபையை காட்டி ராஜபக்சவினர் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டனர். தற்போது சிங்கள மக்களின் வாக்குகளை பெறவும் அதனையே பயன்படுத்தகின்றனர் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.