தமிழர்களை குழுக்களாக்கும் பின்னணியில் இலங்கை அரசு! சிறீதரன் எம்.பி சாடல்

Report Print Arivakam in அரசியல்

தமிழர்களை குழுக்களாக்கும் பின்னணியில் இலங்கை அரசே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும், பச்சிலை சஞ்சிகை வெளியீட்டு விழாவும் நேற்று பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

குறித்த நிகழ்வின் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்துகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழர்களாகிய நாம் இன்று மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். தமிழர்களிடத்தில் பல கட்சிகள் தற்போது தோற்றம் பெற்றிருக்கின்றன.

தமிழ்களின் ஒற்றுமையையும் பேரம் பேசும் சக்தியையும் சிதைப்பதற்கு சிங்கள தேசம் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்க, அதற்குத் தமிழ்க் கட்சிகள் தீனி போட்டுக் கொள்ளும் வகையில் முன்னணி என்றவாறும் கூட்டணிகளாகவும் உருவாக்கி உடைந்து நின்று ஒற்றுமை அற்றவர்களாக இலங்கை அரசின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தமிழ்க் கட்சிகளே துணை நிற்கின்றன.

தற்போது உருவாகியுள்ள முன்னோடிகளாக இருக்கட்டும் கூட்டணிகளாக இருக்கட்டும் இவர்களின் உருவாக்கத்திற்கு பின்னால் இலங்கை அரசே இருக்கிறது.

1980களில் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் முனைப்புப் பெற்ற காலத்தில் பல ஆயுதக்குழுக்கள் உருவாக்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய ஆயுதக்குழுக்கள் அனைத்தும் ஏனைய அரசுகளை தங்கியே நிற்க வேண்டிய நிலை இருந்தது.

அதேபோலவே இப்போதும் தமிழர்களை பல கூறுகளாக்கி தமிழர்களை அரசையே தங்கி நிற்கும் நிலையை உருவாக்க இலங்கை அரசு முனைகிறது.

அதற்கு ஆதரவு கொடுக்கும் செயற்பாடாக தமிழர்களின் செயற்பாடு அமைந்து விடக்கூடாது. இவை எல்லாம் விடுதலை வேண்டி நிற்கும் தமிழ்த் தேசிய இனத்திற்கு ஆரோக்கியமானது அல்ல.

பயங்கர அழிவுகளைத்தரும் ஆபத்தான விடயம் எதிர்வரும் தேர்தல் தமிழர்களுக்கு குருஷேஸ்திர போராகவே அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் உப தவிசாளர், பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.