தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்படாது: சிவசக்தி ஆனந்தன்

Report Print Mohan Mohan in அரசியல்
103Shares

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தமிழ் மக்களுக்கு விரோதமான எந்த ஒரு செயல்பாடையும் செய்யப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மாறாக எங்கள் மக்களுக்கு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை வைத்துக்கொண்டு மக்களுக்கு கிடைக்கக்கூடிய நிரந்தரமான அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல விடயங்களுக்காக எங்கள் கூட்டணி எதிர்காலத்தில் கொள்ளை ரீதியில் மக்களுக்காக உழைப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மக்கள் சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.

இச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஆட்சிக் காலத்தில் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாவலி எல் வலயத்திற்கும், பௌத்த விகாரைகள் அமைப்பதற்கும் வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானம் உள்ளிட்ட சகலவற்றுக்கும் நல்லாட்சி அரசிற்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள்.

இன்று நித்திரைப்பாயில் திடுக்கிட்டு எழும்பியவர்களை போல தாங்கள் ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்று இருக்கக்கூடிய போர்குற்றவாளிகளை நிறுத்தப்போவதாக தேர்தலுக்கான பசப்பு வார்த்தையினை கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

நான்கரை ஆண்டுகாலம் இவர்களின் ஆதரவுடன் ஐ.நா மனித உரிமை பேரவையில் வழங்கப்பட்ட கால நீடிப்பில் எந்த ஒரு விடயத்தினையும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைமுறைப்படுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கத்திற்கு எந்த விதமான அழுத்தங்களையும் கொடுக்காமல் இருந்துவிட்டு, தற்சமயம் தேர்தல் வரும் நேரத்தில் ஐ.நா மனித உரிமை பேரவையில் தாங்கள் நடவடிக்கை எடுக்கப் போவதாக பொய்யான வாக்குறுதிகளை பரப்பி வருகின்றார்கள்.

புதிதாக உருவாகியுள்ள கூட்டணி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேடைகளில் பலவாறாக அரச கட்சிக்கு ஆதரவாக உள்ளதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

உண்மையில் பதவி ஆசைக்கு ஆசைப்பட்டிருந்தால் அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பல்வேறு சட்ட மூலங்களுக்கு என்னை தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிற்கு முண்டு கொடுத்தார்கள்.

வரவு செலவுத் திட்டத்தில் இரட்டிப்பான நிதி ஒதுக்கீட்டிற்கு ஆதரவு கொடுத்தார்கள் ஐ.நா மனித உரிமை பேரவையில் காலநீடிப்பை பெற்றுக்கொடுத்தார்கள்.

பிரமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ்மக்கள் நலன் சார்ந்து பேசவில்லை.

நல்லாட்சி ஆட்சி அரசாங்கத்தினை தங்கள் பதவிகள் சுகபோகங்களுக்காக அரசிற்கு முண்டு கொடுத்தவர்கள், எங்களுக்கும் அவ்வாறு தேவை இருந்திருந்தால் இவர்களுக்கு பின்னால் சென்று நிபந்தனையற்ற ஆதரவினை கொடுத்திருக்க முடியும்.

அப்படிப்பட்ட எந்த ஆதரவினை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தமிழ் மக்களுக்கு விரோதமான எந்த ஒரு செயல்பாடையும் செய்யப் போவதில்லை மாறாக எங்கள் மக்களுக்கு கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்களை வைத்துக் கொண்டு மக்களுக்கு கிடைக்கக் கூடிய நிதந்தரமான அரசியல் தீர்வு அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல விடயங்களுக்காக எங்கள் கூட்டணி எதிர்காலத்தில் கொள்கை ரீதியில் மக்களுக்காக உழைப்போம் என்று கூறியுள்ளார்.

இலங்கை படைத் தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பில் உங்கள் கருத்து என்ன என ஊடகவியலாளர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்ட கேள்விக்கு,

போர்காலத்தில் நடைபெற்ற போர்க்குற்றம் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் படைத் தளபதிகள் உள்ளிட்டவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் இந்த போர்க்குற்றத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் விடயத்தில் ஐ.நா மனித உரிமை பேரவை இணை அனுசரணை வழங்கியதன் அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டிய தேவை எங்களிடமும் உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் நடைபெற்று 18 ஆண்டுகள் கடந்துவிட்டன. 18 ஆண்டு காலத்திற்குள் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டு ஒரு பொதுச் சின்னத்திற்கு கீழ் கொண்டு வருவதற்கு தமிழரசு கட்சி முழுக்க முழுக்க முட்டுக்கட்டையாக இருந்துள்ளது.

இனியும் அது அப்படித்தான் இருக்கும் அந்த கூட்டமைப்புக்கான ஒப்பந்தம் கிடையாது,யாப்பு கிடையாது, கட்டமைப்பு கிடையாது, நிதி சம்மந்தமான வெளிப்படை தன்மை கிடையாது.

இதற்கு அப்பால் சம்மந்தன் தலைமையில் இருக்கக்கூடிய கூட்டமைப்பு ஆனது இராஜதந்திர ரீதியில் எடுத்த அத்தனை நகர்வுகளும் படு தோல்லி என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்கவேண்டும் கூட்டமைப்பாக எப்படி இருக்கவேண்டும் என்பதை, தெற்கில் இருக்கக்கூடிய சிங்கள அரசியல் கட்சிகளிடம் இருந்து சம்மந்தன் படித்துக் கொள்ளவேண்டும்.

மகிந்த,கோட்டாபய ராஜபக்ச கூட்டமைப்பில் எத்தனை கட்சிகள் இருக்கின்றன, எத்தனை சிவில் அமைப்புக்கள் இருக்கின்றன. அவர்கள் பகிரங்கமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றார்கள்.

அவர்கள் தங்கள் சொந்த கட்சியின் சின்னத்தினை விட்டு பொதுவாக ஒரு கூட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களிடம் படிக்க வேண்டும்.

அதேபோல் சஜித் பிரேமதாச, ரணிலின் கூட்டமைப்பு எப்படி செயற்படுகின்றது தங்கள் சொந்த கட்சி சின்னத்தினை விட்டு எப்படி எல்லோரும் சேர்ந்து செயற்படுகின்றார்கள் என்பதை சம்மந்தன், மகிந்தவிடம் இருந்தும் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்தும் ஜே.வி.பியிடம் இருந்தும் ஒரு கூட்டமைப்பாக எப்படி செயற்படவேண்டும் என்பதை அவர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கின்றது .

இதனை செய்யமால் வெறுமெனவே தேர்தல் காலத்தில் மட்டும் ஒற்றுமையினை பற்றிக் கதைப்பதும், வாக்குகள் பிரியக்கூடாது என்பது பற்றி கதைப்பதும் வெறுமனே தமிழ் மக்களை ஏமாற்றும் விடயம் அதிகளவான எண்ணிக்கையான நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவதற்கு இப்படிப்பட்ட கூட்டமைப்பும் தேவையில்லை, இப்படிப்பட்ட ஒற்றுமையும் தேவையில்லை என்றும், அவர் பதிலளித்துள்ளார்.