சொல்வதை செய்து காட்டுவதே எங்கள் கொள்கை: ஆறுமுகன் தொண்டமான்

Report Print Thirumal Thirumal in அரசியல்

சமூகத்துக்காக வேலை செய்யும் கட்சியே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாகும். எனவே, கட்சி அடிப்படையில் அல்லாது பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படும் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சொல்வதை செய்து காட்டுவதே எங்கள் கொள்கையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

பொகவந்தலாவ கீழ்பிரிவு தோட்ட மக்களுக்கான தனி வீட்டுத் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

இத்தோட்டத்தில் 212 குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களுக்கான தனி வீட்டுத்திட்டத்தின் முதற்கட்டமாக 100 வீடுகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக மேலும் 112 வீடுகள் அமைக்கப்படும்.

அப்போது வீடில்லா பிரச்சினை முழுமையாக முடிவுக்குவரும். காங்கிரஸ் என்பது சமூகத்துக்காகவே வேலை செய்து வருகின்றது. சிலர் கடந்த காலங்களில் கட்டுக்காக மட்டுமே வேலை செய்தனர்.

எனவே, யார் எந்த கட்சியில் அங்கம் வகித்தாலும் உங்களுக்கு வந்து சேரவேண்டியவை நிச்சயம் வரும். அவற்றை நாம் பெற்றுக்கொடுப்போம்.

அத்துடன், வீட்டுத்திட்டம் என்பது உரிய நடைமுறைகளை பின்பற்றி தரமாக அமைக்கப்படும். பயனாளர்கள் தேர்வுகூட நீதியான முறையிலேயே நடக்கும்.

குறிப்பாக ஓர் லயத்தை எடுத்துக்கொண்டால் வீடு அத்தியாவசியமாக தேவைப்படுவோருக்கு முதலில் வழங்கப்படும்.

அதன்பின்னர் ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் இருந்தால் அவர்களுக்கு வழங்கப்படும். மூன்றாம் கட்டமாக லயத்தில் எஞ்சியவர்களுக்கு வழங்கப்பட்டு, அந்த லயன் முழுமையாக உடைக்கப்படும்.

தோட்ட நலன்புரி அதிகாரி ஊடாக தேர்வு என்பது உரிய வகையில் இடம்பெற வேண்டும் என தோட்ட முகாமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் தோட்ட அதிகாரிகளாக கடமையாற்றுபவர்களும், தோட்டத்தில் பிறந்து எந்த தொழியில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களும் வீட்டுத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள்.

ஏனெனில் மலையகத்தில் லயத்து வாழ்க்கைக்கு முழுமையாக முடிவு கட்ட வேண்டும் என்பதே இந்திய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. நாமும் அதனையே விரும்புகின்றோம்.

குருவிகூடுகள்போல் வீடுகளை பக்கத்தில், பக்கத்தில் அமைக்காது, முதலில் காணி சுத்திகரிப்பு இடம்பெறும், அதன் பின்னால் எல்லை நிர்ணயம் என மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய வகையிலேயே அவை கட்டப்படும்.

வீட்டுத்திட்டம் முடிவுபெறும்கையோடு தண்ணீர், மின்சாரம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

அதற்கான நிதி எனது அமைச்சு ஊடாக வழங்கப்படும். கிடைக்கும் வளத்தை முறையாகவும், முழுமையாகவும் பயன்படுத்துவோம். கடந்தகாலத்தில் பாரிய கற்பாறையின் கீழ்கூட வீடுகள் கட்டப்பட்டு வளம் வீண்விரயம் செய்யப்பட்டது.

நிதி வழங்குதை நான் தடுத்துவிட்டதாக சிலர் பத்திரிகையில் அறிக்கை விடுத்துள்ளனர். இருந்த நிதியை அவர்கள் கமிஷன் அடித்துவிட்டதாலேயே வழங்க நிதி இல்லாத நிலை ஏற்பட்டது.

ஒரு வீட்டுக்கு ஒரு லட்சம் ரூபா படி கைவரிசை காட்டியுள்ளனர். இதன் பின்னணியில் பல கைகள் விளையாடியுள்ளன.

வீடமைப்பு திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பும் மக்களுக்கு இருக்கின்றது. தரமாக இடம்பெறுகின்றதா, எத்தகைய மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றெல்லாம் பாருங்கள்.

குறைப்பாடுகள் இருந்தால் அறிவிக்கவும். மாறாக நிர்மாணப்பணிகள் முடிந்த பின்னர், அறிவிப்பதில் பயன் இருக்காது.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா கிடைக்கும் என்பதையும் உறுதியாக கூறிக்கொள்கின்றேன். அன்று 140 ரூபா என்றதும் அவர்களுக்கு ஆதரவு வழங்குனீர்கள்.

ஆனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதைப் போல 50 ரூபாவில் வந்துநின்றனர். அதுவும் வழங்கப்படவில்லை. தீபாவளிக்கு 5000 ரூபா வழங்கப்படும் என்றார்கள். அதையும் நம்பினீர்கள். இறுதியில் என்ன நடந்தது?

இன்றுள்ள அரசாங்கம் அப்படி அல்ல. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையிலான இந்த அரசாங்கம் சொல்வதை நிச்சயம் செய்யும்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் அப்படித்தான். அதேவேளை, இரு மாதங்களுக்கு முன்னர் வீடமைப்புத் திட்டத்தை கண்காணிப்பதற்கு யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். எமது பல்கலைக்கழக மாணவர்களையும் சந்தித்தேன்.

அப்போது தமக்கு போக்குவரத்து செலவு அதிகம் என மாணவர்கள் கூறினர். தற்போது 100 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

இரு விடுதிகளை கட்டுவதற்கு காணி வழங்குமாறு அரச அதிபரிடமும், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளேன்.

அவ்வாறு காணி ஒதுக்கப்பட்டால் ஆண், பெண் என இரண்டு விடுதிகளை கட்டுவதற்கு உதவுமாறு இந்திய சமுதாயப் பேரவையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.