யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த சாசனத்தை போஷிக்க வேண்டும்! லக்ஷ்மன் கிரியெல்ல

Report Print Steephen Steephen in அரசியல்

பௌத்த சாசனத்தை பாதுகாத்து போஷிப்பது அனைத்து அரசாங்கங்களினதும் கடமை என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன் அது அரசியலமைப்புச் சட்டத்திலும் கூறப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கண்டி - பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் விகாரை ஒன்றில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

விகாரைகள் பௌத்த சாசனத்திற்கும் அதன் முன்னேற்றத்திற்கும் முக்கியமானவை.

எமது அயல் நாடான இந்தியாவில் அசோக மன்னர் காலத்தில் 84000 பௌத்த விகாரைகள் கட்டப்பட்டன.

முழு இந்தியாவும் பௌத்த நாடாக பிரபலமானது. எனினும் தற்போது இந்தியாவில் நூற்றுக்கு ஒரு வீதம் கூட பௌத்தர்கள் இல்லை.

வட இந்தியாவில் ஏற்பட்ட மொகலாய ஆக்கிரமிப்பு காரணமாக அனைத்து பௌத்த விகாரைகளும் அழிக்கப்பட்டன.

பௌத்த பிக்குகள் தங்கி இருக்க இடமில்லாமல் போனது. பௌத்த பிக்குகள் இல்லாத காரணத்தினால் பௌத்தம் அழிந்தது.

எனினும் எமது நாட்டில் அப்படி நடக்கவில்லை என்பதால் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

1505 ஆம் ஆண்டு முதல் 400 வருடங்கள் மூன்று ஐரோப்பிய இனத்தவர் எம்மை ஆட்சி செய்தனர். போத்துகேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் எம்மை ஆட்சி செய்தனர்.

அவர்களால் பௌத்த சாசனத்தை அழிக்க முடியாமல் போனது. எமது பௌத்த பிக்குகளின் தைரியம் காரணமாகவே பௌத்த சாசனத்தை அழிக்க முடியாமல் போனது.

ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகள் எம்மை ஆட்சி செய்தாலும் எம்மால் பௌத்த சாசனத்தை பாதுகாக்க முடிந்தது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த சாசனத்தை போஷிக்க வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட கடமை.

பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.