இலங்கைக்கு எதிராக மாற்று வழி வேண்டும் - சர்வதேசத்தை வலியுறுத்தி தமிழரசுக் கட்சி தீர்மானம்

Report Print Rakesh in அரசியல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30/01 மற்றும் 40/01 ஆகிய தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசு விலகுவதைக் கண்டித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சியின் அலுவலகமான அறிவகத்தில் இன்று நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஞா.ஸ்ரீநேசன், ஈ.சரவணபவன், சி.சிறிதரன், எஸ்.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, க.துரைரெட்ணசிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே ஐ.நா. விவகாரம் தொடர்பில் பேசப்பட்டு மேற்படித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

"ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 30/01 மற்றும் 40/01 ஆகிய தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கியுள்ளது. ஆனால், புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் அதிலிருந்து விலகுவதாக இலங்கை அரசு திடீரென அறிவித்துள்ளது.

இந்தத் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசு விலகினாலும் சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தைக் கைவிடாமல் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன், இலங்கையைத் தப்பவிடாமல் அதற்கு எதிராக மாற்று நடவடிக்கையை உடன் எடுக்க வேண்டும்" என்று கோரியே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.