கோட்டாபயவின் சகா - விமலின் நாடாளுமன்ற வாழ்வுக்கு 20 வருடமாம்

Report Print Rakesh in அரசியல்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்சவின் நாடாளுமன்ற வாழ்வின் 20 வருடப் பூர்த்தியை முன்னிட்டு நேற்றுப் பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற விழாவில் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் கலந்துகொண்டனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'20 வருட வீரவன்ச' எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் விமல் வீரவன்சவின் அரசியல் வாழ்க்கை பற்றி இசுறு பிரசங்கவினால் எழுதப்பட்ட 'விமல் – யுககாரகத்வயே பூமிகாவ' (விமல் - யுகங்களின் பங்கு) எனும் நூல் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்தல், அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லல் மற்றும் நாட்டின் கௌரவத்துக்காக முன்னிற்றல் போன்ற விடயங்களில் தான் மற்றும் வீரவங்ச முகங்கொடுத்த சவால்கள், பிரச்சினைகள் பற்றி பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் முன்னிலையில் நினைவுகூர்ந்தார்.

கோட்டாபய ராஜபக்ச பெரும்பான்மை விருப்பத்தின் பேரில் ஜனாதிபதியாகப் பதவி ஏற்கும் வரையிலான செயற்பாட்டில் தடைகளை வெற்றிகொண்டு கடந்து வந்த பாதையில் ஒரு பலமான சக்தியாக விமல் வீரவன்ச இருந்தார் எனப் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச, நாடு அரசை இழக்கும் ஆபத்துக்குள்ளான சந்தர்ப்பத்திலேயே கோட்டாபய ராஜபக்சவை நாட்டின் தலைவராக்க முடிந்தது எனத் தெரிவித்தார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் கலாசார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சங்கைக்குரிய இதுராகாரே தம்மரத்தன தேரர் மற்றும் தொல்பொருள் பட்டப்பின் படிப்பு கல்வி நிலையத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோர் விசேட உரையாற்றினர்.

அமைச்சர்கள், புத்திஜீவிகள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.